நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நாசா

 

நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நாசா

நிலவில் சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. மேலும் இது தொடர்பான படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சந்திரயான் 2வை கடந்த ஜூலையில் விண்ணில் ஏவியது இஸ்ரோ. திட்டமிட்டப்படி, சந்திரயான் 2 தனது பயணத்தை தொடர்ந்தது. முதலில் ஆர்ப்பிட்டரை நிலவின் சுற்று வட்டப்பாதையில் கழற்றி விடப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 7ம் தேதி அதிகாலையில் நிலவில் சந்திரயான் 2வின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

நாசா

ஆனால் கடைசி நேரத்தில், நிலவின் மேற்பரப்பு மேல் 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும், 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொண்டால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விடலாம் என்ற வாய்ப்பும் இருந்தது. ஆனால் அதுவும் முடியாமல் போனது.

நாசா வெளியிட்ட புகைப்படம்

இந்த சூழ்நிலையில், விக்ரம் லேண்டர் நிலவில் எந்தபகுதியில் இறங்கியது மற்றும் அது இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஈடுபட்டது. நாசா தனது எல்.ஆர். ஆர்பிட்டரை இதற்காக பயன்படுத்தியது. தற்போது நிலவில் விக்ரம் லேண்டர் பகுதியை கண்டுபிடித்துள்ளதகாக நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டர் இறங்கியதால் நிலவில் ஏற்பட்ட தடம் மற்றும், அதனை சுற்றி லேண்டரின் சிதைந்த பாகங்கள் கிடக்கும் படங்களை வெளியிட்டுள்ளது.