நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் என்பது மட்டும்தான் இல்லை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

 

நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் என்பது மட்டும்தான் இல்லை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் உள்பட 2 வாக்குறுதிகள் மட்டும்தான் இடம்பெறவில்லை என காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்தார்.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க.-சிவ சேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. அதேசமயம் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரசுடன் இணைந்து தேர்தலில் களம் இறங்கியுள்ளது. தேர்தல் நாள் நெருங்குவதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என ஒரு பெரும் படையை அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

சமீபத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களது கூட்டணி தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. அந்த தேர்தல் அறிக்கையை மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையாக கிண்டல் அடித்துள்ளார். நேற்று நாக்பூரில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது:

தாஜ்மஹால்

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டுமே விடுப்பட்டுள்ளது. முதலாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாஜ் மஹால் கட்டுவோம் என்பது. இரண்டாவது நிலவில் அனைத்து குடும்பங்களுக்கும் பிளாட் பெறுவோம் என்பது. இவ்வாறு அவர் கலாய்த்து பேசினார்.