நிலக்கரி, ராணுவ தளவாடம், மின்சாரம் என அனைத்திலும் தனியாருக்கு வாய்ப்பை திறந்துவிட்ட நிர்மலா சீதாராமன்! – 4ம் நாள் அறிவிப்பின் விவரம்

 

நிலக்கரி, ராணுவ தளவாடம், மின்சாரம் என அனைத்திலும் தனியாருக்கு வாய்ப்பை திறந்துவிட்ட நிர்மலா சீதாராமன்! – 4ம் நாள் அறிவிப்பின் விவரம்

ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இன்று நான்காவது நாளாக அறிவிப்புகளை வெளியிட்டார்.

நான்காவது நாளான இன்று நிர்மலா சீதாராமன், கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார உதவித் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று மோடி அறிவித்ததைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இன்று நான்காவது நாளாக அறிவிப்புகளை வெளியிட்டார். இன்று அவர் பேசும்போது, “சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல. சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது. போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி” என்று விளக்கம் அளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம் வருமாறு:
செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க திட்டம். இஸ்ரோ அமைப்பின் உட்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

satelite

பாதுகாப்புத் துறைக்கான அந்நிய முதலீட்டை 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவீதம் வரை உயர்த்த முடிவு.
ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும். பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டில் கொள்முதல் செய்ய புதிய விதிமுறை அமல்படுத்தப்படும்.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களை தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.
உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி.
நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும். நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

coal-78

புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும். இதன்மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும். மின் பகிர்மான நிறுவனங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் விமான நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி மிச்சமாகும். 

air-india-89

6 விமான நிலையங்களில் தனியார் முதலீடு அனுமதிக்கப்படும். விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படும்.
கனிம சுரங்கங்களில் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். சுரங்கங்களில் உள்ள கனிமப் பொருட்களை பிரித்து எடுக்க ஒருங்கிணைந்த ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படும். 500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்.
நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும். தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளன.