நிறைவடைந்தது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்து

 

நிறைவடைந்தது உலக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.3 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்து

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

தமிழகத்துக்கு அன்னிய முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டை துவக்கி வைத்தார். மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மூத்த அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு ‘தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை -2019’-ஐ வெளியிட்டு பேசினார்.

இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கான 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி, இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலீடுகளால் தமிழகத்தில் 50,000பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால் ரூ.3.42 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்வதற்கு 304 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல் பெட்ரோலிய ஆலை ரூ 27400 கோடி முதலீடு செய்யவுள்ளது. அடுத்த மாநாடு 2021-ஆம் ஆண்டு நடத்தப்படும் என்றார்.

நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி என்றார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமமும், ரூ.7000 கோடிக்கு ஹுண்டாய் நிறுவனமும், ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனமும், .1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ரூ.12,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும், ரூ.27,400 கோடிக்கு சிபிசிஎல் நிறுவனமும், ரூ.23,800 கோடிக்கு என்எல்சி நிறுவனமும், ரூ.1500 கோடிக்கு EICHER நிறுவனம் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.