நிறுவன வரியை குறைத்த போதும், கார் விலையை குறைக்க மறுக்கும் முன்னணி நிறுவனங்கள்

 

நிறுவன வரியை குறைத்த போதும், கார் விலையை குறைக்க மறுக்கும் முன்னணி நிறுவனங்கள்

நிறுவன வரி குறைக்கப்பட்டாலும், கார்களின் விலையை குறைக்க வாய்ப்பில்லை என ஹூண்டாய், ஹோன்டா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன. அதேசமயம், விலை குறைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக மாருதி நிறுவனம் தெரிவித்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமையன்று உள்நாட்டு நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 25.12 சதவீதமாக ( செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்பட) குறைத்தார். வரியை குறைத்தால் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என எண்ணத்தில் மத்திய அரசு இந்த காரியத்தை செய்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தொழில்துறையினர் வரவேற்றனர். அதேசமயம் நிறுவன வரி குறைப்பால் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை குறைக்கும் என எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

கார்

குறிப்பாக வாகனங்களின் விலையில் அதிரடி தள்ளுபடி கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை மந்தமாக இருப்பதும், பண்டிகை காலம் நெருங்குவதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விலையை குறைக்க வாய்ப்புள்ளதே இதற்கு காரணம். 

கார் மாடல்கள்

இந்நிலையில், நிறுவன வரி குறைக்கப்பட்டுள்ளதால் கார்களின் விலை குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு, மாருதி சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா பதிலளிக்கையில், நிறுவனம் இது தொடர்பாக பரிசீலனை செய்யும். அடுத்த 2 நாட்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். இது தொடர்பாக விரைவாக முடிவு எடுக்கப்படும். எங்களால் ஒரு மாதம் காத்திருக்க முடியாது என தெரிவித்தார்.

அதேசமயம், ஹூண்டாய், ஹோன்டா, டொயோட்டோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் கார் விலையை குறைக்க வாய்ப்பில்லை என தெரிவித்தன. நிறுவன வரி குறைப்பால் பணம் புழக்கம் அதிகரிக்கும் ஆனால் பொருளின் உற்பத்தி செலவினத்தை குறைக்காது. தற்போது உள்ள வாடிக்கையாளர்கள் சலுகை போதுமானது மற்றும் இதற்கு மேலும் விலையை குறைக்க வாய்ப்புகள் இல்லை எனவும் கூறின.