நிறுவனங்களின் நம்பிக்கையை தகர்த்த ஆட்டோ விற்பனை!

 

நிறுவனங்களின் நம்பிக்கையை தகர்த்த ஆட்டோ விற்பனை!

தொடர்ந்து வளர்ச்சி கண்டு வந்த ஆட்டோ விற்பனை கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11.64 சதவீதம் குறைந்துள்ளது. அந்த காலாண்டில் மொத்தமே 2.67 லட்சம் ஆட்டோ மட்டுமே விற்பனையாகியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மந்தகதியில் உள்ளது. மேலும் வேலைவாய்ப்பும் பெரிய அளவில் இல்லை. இதனால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டது. இதனால் மக்கள் தங்களது தேவைகளை சுருக்கி வருகின்றனர். இதனால் வாகனங்கள் விற்பனை கடந்த சில மாதங்களாக படுத்து விட்டது. குறிப்பாக பயணிகள் கார் விற்பனை பல மாதங்களாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ஆட்டோ

பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள், வர்த்தக வாகனங்கள் விற்பனை நிலவரம் மோசமாக இருந்தாலும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றவில்லை. 2017-18 மற்றும் 2018-19ம் நிதியாண்டுகளில் 3 சக்கர வாகனங்கள் விற்பனை முறையே 24 மற்றும் 37 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. இந்நிலையில் ஆட்டோ விற்பனைக்கும் போதாத காலம் வந்து விட்டது போல் தெரிகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஆட்டோ தயாரிப்பு நிறுவனங்கள்  மொத்தம் 2.67 லட்சம் ஆட்டோக்கள் மட்டுமே விற்பனை செய்து இருந்தன. சென்ற நிதியாண்டின் இதேகாலாண்டில் மொத்தம் 3.02 லட்சம் ஆட்டோக்கள் விற்பனையாகி இருந்தது.

ஆட்டோ தயாரிப்பு ஆலை

ஆட்டோ விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கணக்கீடு காலத்தில் ஒட்டு மொத்த அளவில் 1.55 லட்சம் ஆட்டோக்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் 2,819 ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளது. 36,706 ஆட்டோக்களை ஏற்றுமதி செய்துள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 12,715 ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளது. மேலும் பல நிறுவனங்களின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை நிலவரமும் மோசமாகதான் உள்ளது.