நிர்மலா தேவி விவகாரம்: இறுதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

நிர்மலா தேவி விவகாரம்: இறுதி குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றதுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மதுரை: நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றதுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி காவல் நிறைவடைந்து, தற்போது மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டுள்ளார்

இதனிடையே, நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகள் என கூறப்படுவோரிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என மகளிர் சங்கத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று வருவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யுமாறு, ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை டிசம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.