நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பெரும் பயனை அளிக்கும்! – ஜி.கே.வாசன் நம்பிக்கை

 

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பெரும் பயனை அளிக்கும்! – ஜி.கே.வாசன் நம்பிக்கை

இந்தியாவில் கொரோனா, ஊரடங்கு ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களும் அடைந்துள்ள பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க மத்திய அரசின் அறிவிப்புகள் உதவியாக அமையும். குறிப்பாக, நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்புகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பிரதான அறிவிப்பாக அமைந்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள விவசாயிகளுக்கான பொருளாதார உதவிகள் மிகப்பெரும் பலனை அளிக்கும் என்று ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா, ஊரடங்கு ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களும் அடைந்துள்ள பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க மத்திய அரசின் அறிவிப்புகள் உதவியாக அமையும். குறிப்பாக, நேற்றைய தினம் மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவிப்புகள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பிரதான அறிவிப்பாக அமைந்துள்ளது.

nirmala-sitharaman-78

அதாவது, விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் நிலைய உட்கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு என்பது விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையின் முன்னேற்றத்துக்குப் பயன்படும். விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்கள், குளிர்சாதன கிடங்குகள் மேம்படுத்தப்படும் என்பதால் விளைபொருட்களுக்கான பாதுகாப்பும், விலையும் உறுதி செய்யப்படும்.
விவசாய விளைபொருட்களை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்த, கொண்டு சேர்க்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்வதால் விவசாயிகளுக்கு வருவாய் அதிகமாக கிடைக்கும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்திருப்பது உண்மையிலேயே விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும்.
விளைபொருட்களின் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம், குளிர்பதன வசதிக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்பதால் விவசாயிகள் பயனடைவார்கள். இத்திருத்தத்தால் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், அதிக அளவில் ஏற்றுமதி செய்வதற்கும், லாபம் கிடைப்பதற்கும், விளைபொருட்களின் உரிய விலைக்கு நிலைத்த தன்மை இருப்பதற்கும், விதைப்பதற்கு முன் எவ்வளவு விலை, எவ்வளவு விலையில் வழங்கப்படும் உள்ளிட்ட குறைந்தபட்ச உத்தரவாதம் கிடைப்பதற்கும் சட்டப்பூர்வ நெறிமுறைகள் அமைக்கப்படுவது மிகச்சிறப்பானது.

குறு உணவு நிறுவனங்களை உருவாக்குவதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படுவது உணவு உற்பத்தியாளர்களுக்கு உதவியாக இருக்கும். 6 மாத சோதனை அடிப்படையிலான ‘ஆப்பரேஷன் கிரீன்ஸ்’ என்ற திட்டத்தில் பழங்கள், காய்கறிகள் இடம் பெற்றிருப்பது மிக முக்கிய அறிவிப்பாகும்.
குறிப்பிட்ட பகுதியில் மட்டும் விளையும் விளைபொருட்களை கண்டறிந்து அவற்றின் உற்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் சிறு, குறு என அனைத்துத் தரப்பு விவசாயிகளும் ஆர்வத்தோடு பயிர் செய்ய முன்வருவார்கள். மீனவர் நலனுக்காக ரூ.11 ஆயிரம் கோடியும், மீன்பிடி உள்கட்டமைப்புக்காக ரூ.9 ஆயிரம் கோடியும் நிதியாக ஒதுக்கப்படுவதால் கடல், உள்நாட்டு மீன்பிடிப்பு, பண்ணை மீன் வளர்ப்பு ஊக்குவிக்கப்பட்டு, 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பும் பெற முடியும்.
கால்நடைகளுக்கான நோய்தடுப்பு திட்டத்துக்கு ரூ.13 ஆயிரத்து 343 கோடி நிதி ஒதுக்கி, மருந்து வழங்கப்படும் என்பதால் 100 சதவீதம் கால்நடைகள் நோய் தடுப்பினால் பாதுகாக்கப்படும். மேலும், கால்நடை வளர்ப்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்குவதன் மூலம் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி மேம்படும்.

farmers-789.jpg

மூலிகை தாவர பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருப்பதால் மூலிகை மருந்தை மக்களிடம் கொண்டு சேர்த்து உடல்நலத்தை பாதுகாக்கலாம். தேன் கூட்டு வளர்ப்புக்காக ரூ. 500 கோடி உதவ இருப்பதால் 2 லட்சம் தேனீ வளர்ப்பவர்கள் உற்சாகத்தோடு தொழிலில் ஈடுபட்டு, வாழ்வாதாரம் மேம்படும்.
எனவே, பிரதமர் அறிவித்த ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கான ரூ.20 லட்சம் கோடியில் நேற்றைய தினம் மத்திய அரசு விவசாயத் தொழில் மேம்பாட்டுக்கும், விவசாயிகளின் வாழ்வு மேம்படவும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரதான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மேலும், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளும் வளர்ந்து அத்துறை சார்ந்தவர்கள் அனைவரும் முன்னேற்றம் அடையும் வகையில் அறிவிப்புகள் வெளிவந்திருப்பதால் அவையெல்லாம் செயல்பாட்டுக்கு வரும் போது பெரும் பயன் அளிக்கும் என்பது தான் தமாகாவின் எதிர்பார்ப்பாகும்” என்று கூறியுள்ளார்.