நிர்பயா வழக்கு தாமதம் கற்று கொடுத்த பாடம்! மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் அதனை நிறைவேற்ற வேண்டும்…உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு…

 

நிர்பயா வழக்கு தாமதம் கற்று கொடுத்த பாடம்! மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் அதனை நிறைவேற்ற வேண்டும்…உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு…

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற (பிளாக் வாரண்ட்) உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் அதனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மனு தாக்கல் செய்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தந்திரமாக ஒருவர் பின் ஒருவராக பல்வேறு சட்ட வாய்ப்புகளை  பயன்படுத்தி தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை காலதாமதம் செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இது போன்று எதிர்காலத்தில் இது போன்ற வழக்குகளில் நடக்காத வகையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒரு குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு 7 நாட்களில் டெத் வாரண்ட் பிறப்பிக்கவும், அதன்பின் 7 நாட்களுக்குள் மறு ஆய்வு, சீராய்வு, கருணை மனு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிக்குத் தண்டனையை நிறைவேற்ற அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் தண்டனை குறித்து மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின், சீராய்வு மனுத் தாக்கல் செய்யக் காலக்கெடுவை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் நலனை கருத்தில் கொண்டு, முன்பு பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை மாற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.