நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்….. காலம் கடந்தாலும் செய்த குற்றத்துக்கு தண்டனை உறுதி

 

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்….. காலம் கடந்தாலும் செய்த குற்றத்துக்கு தண்டனை உறுதி

நீண்ட போராடத்துக்கு பிறகு நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலையில் திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

நிர்பயா தாயார் ஆஷா தேவி

அதேசமயம் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடக் கூடாது என பெரிய சட்டப்போராட்டமே நடத்தினார். இறுதியாக மார்ச் 20ம் தேதி (இன்று) அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் 4வது முறையாக புதிதாக டெத் வாரண்ட் பிறப்பித்தது. இருப்பினும் குற்றவாளிகள் தூக்கு மேடை ஏறுவதற்கு சில மணி நேரங்கள் முன்பு வரை தண்டனையிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

உச்ச நீதிமன்றம்

கடைசியாக நள்ளிரவுக்கு மேல் குற்றவாளி பவன் குப்தாவின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். காலம் கடந்தாலும் செய்த குற்றத்துக்கான தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்பதை நிர்பயா வழக்கு உணர்த்தி உள்ளது.