நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட, அவரை 2 நாள் எங்க சிறைக்கு அனுப்புங்க…. டெல்லி திஹார் சிறை நிர்வாகம்

 

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட, அவரை 2 நாள் எங்க சிறைக்கு அனுப்புங்க…. டெல்லி திஹார் சிறை நிர்வாகம்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட உ.பி. சிறை பணியாளர் பவானின் 2 நாள் சேவை எங்களுக்கு தேவை என உ.பி. சிறை துறைக்கு டெல்லி திஹார் சிறை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தலைநகர்  டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரும் வரும் 1ம் தேதி அதிகாலையில் தூக்கிலிடப்பட உள்ளனர். அவர்கள் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி திஹார் சிறை நிர்வாகம், உ.பி. சிறை துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட மீரட் சிறை பணியாளர்  பவானின் சேவை தங்களுக்கு இரண்டு நாள் (வரும் 31 மற்றும் 1ம் தேதிகள்) தேவைப்படுகிறது. அதனால் அவரை திஹார் சிறைக்கு அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

தூக்கு

தூக்கிலிடும் பணியை செய்யும் பவான், நிர்பயா பாலியல் பலாத்கார மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தயார் என ஏற்கனவே விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் திஹார் சிறை நிர்வாகம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது குறித்து கூறுகையில், குற்றவாளிகள் தூக்கிலிடும்போது நான், நிர்பயாவின் பெற்றோர் மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு அடைவர். இது போன்ற நபர்களை கட்டாயம் தூக்கிலிட வேண்டும் என தெரிவித்தார்.