நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி மனு….. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி மனு….. உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் இன்று, நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் கடந்த 2012 டிசம்பரில் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கீழே வீசப்பட்டார். தீவிர மருத்துவ சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மாணவி உயிர் இழந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயாக வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.

உச்ச நீதிமன்றம்

இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிடக்கோரி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

வினய் சர்மா

உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவை விசாரணை செய்கிறது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக டெத் வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா சிறையில் தன்னை தானே சுவரில் மோதி காயம் ஏற்படுத்தி கொண்டார். தூக்கு தண்டனையிலிருந்து தப்பிக்கும் நோக்கில் வினய் சர்மா இந்த காரியத்தை செய்ததாக கூறப்படுகிறது.