நியூசிலாந்து மசூதிக்குள் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி

 

நியூசிலாந்து மசூதிக்குள் நடந்த பயங்கர துப்பாக்கி சூடு: உயிர் தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் என்ற இடத்திலிருந்த இரண்டு மசூதிக்குள்  இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்து: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் என்ற இடத்திலிருந்த இரண்டு மசூதிக்குள்  இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹாக்லே பார்க் என்ற இடத்தில்  இரண்டு மசூதிகள் இருந்தன. இந்நிலையில் இன்று காலை மசூதிக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த பயங்கர தாக்குதலில்,  40 பேர் பலியானதாகவும், இன்னும் சிலர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க 9க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன. பலி எண்ணிக்கை   அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் நியூசிலாந்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், ‘நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து  சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த  மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். இது குறித்து வங்கதேசம் கிரிக்கெட் வீரர் முகமது இசாம், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வங்கதேசம் அணி முழுவதுமாக துப்பாக்கிச் சூடு நடந்த ஹாக்லே பார்க்கில் இருந்து  ஓவல் என்ற இடத்திற்கு ஓடி தப்பித்து உயிர்பிழைத்தோம்.  தற்போது பாதுகாப்பாக உள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட, நபர்  ஒருவர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வேறு யாரேனும் அப்பகுதியில் உள்ளனரா? என போலீசார் தேடி வருவதோடு, தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.