நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்; இந்தியர் மீது துப்பாக்கிச்சூடு!

 

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்; இந்தியர் மீது துப்பாக்கிச்சூடு!

நியூசிலாந்து நாட்டு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாகிச்சூட்டில் இந்தியர் ஒருவர் மீது குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயங்களுடம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்

வெலிங்கடன்: நியூசிலாந்து நாட்டு மசூதிகளில்  நடத்தப்பட்ட துப்பாகிச்சூட்டில் இந்தியர் ஒருவர் மீது குண்டுகள் பாய்ந்ததில் அவர் படுகாயங்களுடம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 39 பேர் மருத்துவமனைகளில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், “நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கூடுதல் தகவல்கள் விரைவில் தெரியவரும்” என்றார்.

இதனிடையே, துப்பாக்கிச்சூடு தொடர்பாக மூன்று பெண்கள், ஒரு ஆண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் மைக் புஷ் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிபொருட்களை செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் என அந்நாட்டு பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்நிலையில், துப்பாகிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் ஹைதராபாத்தை சேர்ந்த அஹமது இக்பால் ஜகாங்கீர் என்பது தெரியவந்துள்ளது. அவரது இரண்டு நண்பர்களும் துப்பாக்கி சூட்டில் பலியான நிலையில், அஹமது இக்பால் ஜகாங்கீர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடி வரும் அவரை சென்று பார்க்க, அவரது சகோதரருக்கு உடனே விசா வழங்க மத்திய மற்றும் தெலங்கானா மாநில அரசுகளை கோரியுள்ளனர்.

இதுகுறித்து அஹமது இக்பால் ஜகாங்கீரின் சகோதரர் முகமது குர்ஷீத் ஜகாங்கீர் கூறுகையில், எனது சகோதரர் சுமார் 12 ஆண்டுகளாக நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு உணவகம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். ஏழு மாதங்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்தில் உள்ள எங்களது வீட்டுக்கு வந்து விட்டு சென்றார். அவருக்கு மனைவியும் 3 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அவர் சென்ற போது, துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகியுள்ளார். அவரது இரண்டு நண்பர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்த சரியான தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை. நியூசிலாந்து போன்ற குற்ற சம்பவங்கள் குறைவாக உள்ள நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இந்தியர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 021803899 அல்லது 021850033 என்ற எங்களில் தொடர்பு கொள்ளலாம் என நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.