நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இந்திய அணி வெற்றி..தொடரை சமன் செய்தது!!

 

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: இந்திய அணி வெற்றி..தொடரை சமன் செய்தது!!

நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது

-குமரன் குமணன்

ஆக்லாந்து: நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து அணிக்கெதிராக இந்தியா விளையாடும் இருபது ஒவர் தொடரின் இரண்டாவது ஆட்டம் ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நியூசிலாந்தின் முதல் 4 விக்கெட்டுகள் 7.5 ஓவர்களில் 50 ரன்களுக்கு விழுந்துவிட்டன. இருப்பினும் கோலின் டி கராண்ட்ஹோம் -ராஸ் டெய்லர் இடையிலான 77 ரன்கள் கூட்டணியின் துணையோடு நியூசிலாந்து 15.4 ஓவர்களில் 127 ரன்களை எட்டியது. இறுதிக்கட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் துல்லியமாக செயல்பட்டு நியூசிலாந்து ஸ்கோரை 8 விக்கெட் இழப்புக்கு 158 ஆக கட்டுப்படுத்தினர்.

டி கராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 28 பந்துகளில் 50 ரன்களும், டெயலர் 3 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர். குருணால் பண்ட்யா 3 விக்கெட்டுகளும் கலீல் அகமது 2 விக்கெட்டுகளும் ஹர்திக் மற்றும் புவனேஸ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ரோஹித் ஷர்மா – தவன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9.2 ஓவர்களில் 79 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

29 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸர்களோடு 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா. இந்த இன்னிங்ஸின் போது அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் (92 போட்டிகளில் 84 இன்னிங்ஸ்களில் 2288 ரன்கள்) எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, மார்டின் கப்திலின் 76 போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் 2272 ரன்கள் என்ற சாதனையை கடந்தார் ரோஹித்.

அடுத்த விக்கெட்டுகளாக தவன் 30 (31) 2×4 மற்றும் விஜய் ஷங்கர் 14 (8) 1×4 1×6 என ஆட்டமிழந்தாலும் ரிஷப் பண்ட் 40*(28  ) 4×4 1×6, தோனி 20*(17) 1×4 இருவரும் இணைந்து அணியை வெற்றிப்பாதையில் செலுத்தினர். இறுதியில் 18.5 ஓவர்களில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று தொடரை சமனுக்கு கொண்டு வந்தது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 20 ஓவர் போட்டிகளில் முதன் முறையாக பெற்ற வெற்றி இது தான். குருணால் பண்டியா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி வருகிற 10-ம் தேதி ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது