நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

 

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது

மவுங்கானுய்: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், மவுண்ட் மவுங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 90 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தது.

இந்நிலையில், அந்த அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் காலின் டி கிராண்ட்ஹோம் நீக்கப்பட்டு, பந்து வீச்சாளர் சான்ட்னர் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டிருந்தார். விஜய் ஷங்கருக்கு பதில் ஹர்திக் இடம் பெற்றார்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குப்தில் 13 ரன்களிலும், மன்ரோ 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். டெய்லர் மற்றும் லாத்தம் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்ததுடன், இருவரும் அரை சதம் அடித்தனர். லாதம் 51 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியாக நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 106 பந்துகளில் 9 பவுண்டரிகளோடு 93 ரன்கள் எடுத்தார். டாம் லாதம் 64 பந்துகளில் ஒரு பவுண்டரி ஓரு சிக்ஸருடன் 51 ரன்கள் அடித்திருந்தார். 

இதையடுத்து, 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த தவான், 28 ரன்னில் போல்ட் ஓவரில் ராஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இரு போட்டியிலும் தவான் அரை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் வந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தனது 39வது அரை சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் ஷர்மா, சான்ட்னர் ஓவரில் இறங்கி வந்து சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு, 62 ரன்னில் ஸ்டெம்பிங் ஆனார். அதைத் தொடர்ந்து, 60 ரன்னில் போல்ட் ஓவரில் விராட் கோலி கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக 43 ஓவரில், இந்திய அணி  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முன்னதாக, கடந்த 2008-09 சீசனில், தோனி தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றி இருந்தது. அதற்கு பிறகு 10 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த முறை நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி இன்னொரு அரிய சாதனையையும் படைத்துள்ளது. 2012-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு பின் ஒரே தொடரில் தொடர்ந்து மூன்று முறை நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய அணி இந்திய அணி தான்.