நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது

-குமரன் குமணன்

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேப்பியர் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. மிட்செல் சான்ட்னர் எட்டு மாதங்கள் இடைவெளிக்கு பின் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பினார். இந்திய அணியில கார்த்திக் நீக்கப்பட்டு ராயுடு சேர்க்கப்பட்டார்.

மார்ட்டின் குப்தில் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஷமி, தான் பங்கேற்ற 56-ஆம் ஒருநாள் போட்டியில் தனது நூறவது விக்கெட்டை பதிவு செய்தார். இந்த மைல் கல்லை எட்டிய இந்தியர்களில் அதிவேகமாக வந்தவர் ஷமி தான். இந்த வகையில் உலக சாதனை தற்போது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் வசம் உள்ளது. அவர் தனது 44-ஆம் போட்டியில் 100 விக்கெட் மைல் கல்லை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொட்டுவிட்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் விக்கெட்டையும் ஷமி கைப்பற்றினார்.

அதற்கடுத்த விக்கெட்டுகளில் இரண்டை சஹாலும், ஒன்றை ஜாதவ்வும் ஒன்றை திரும்பி வந்த ஷமியும் கைப்பற்றினர். சீரான இடைவெளியில் தன்னை சுற்றிலும் விக்கெட்டுகள் விழுவதை பார்த்த வில்லியம்ஸ்சன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை வீழ்த்தியவர் குல்தீப் யாதவ். தனது இன்னிங்ஸில் 81 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 7 பவுண்டரிகள் அடித்திருந்தார். வெறும் 38 ஓவர்கள் வரை மட்டுமே நீடித்த நியூசிலாந்து இன்னிங்ஸில் அந்த அணி 157 ரன்களுக்கு சுருண்டது.

உண்மையில் இந்த இன்னிங்ஸில் விக்கெட் எடுக்காதவர்களான புவனேஸ்வர் குமார் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் பந்துவீச்சை கூட நியூசிலாந்து தாக்கி ஆட முயலவில்லை. இவர்கள் இருவர் பந்துவீச்சின் கூட்டுத்தொகையாக வந்த 9 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே வந்தன. 

குறைந்த அளவு ஓவர்கள் மட்டுமே விளையாடப்பட்டதால் இந்திய இன்னிங்ஸ் உடனடியாக தொடங்கியது. இந்தியா, விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தபோது இடைவேளை வந்தது. இது போன்ற இடைவேளைகளுக்கு பின் ஆட்டம் தொடங்கும் தருணத்தில் உடனே ஒரு விக்கெட் விழுவது வழக்கம். அதற்கு ஏற்ப அந்த ஒவரின் இரண்டாவது பந்தில் ரோஹித் ஷர்மா 11 ரன்களில் ப்ரேஸ்வெல் பந்துவீச்சில் கப்திலுக்கு கேட்ச் கொடுத்தார்.அப்போதைய ஸ்கோர் 41.

அடுத்த ஒவரின் முதல் பந்து “வைட் பால் ” ஆனது. அப்போது, அதீத சூரிய ஒளி, பந்தை காண இடையூறாக இருப்பதாக தவன் தெரிவித்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பொதுவாக இவ்வாறான சூழலை தவிர்க்கும் வகையில் வடக்கிலிருந்து தெற்காக ஆடுகளங்களை அமைப்பது வழக்கம். ஆனால் நேப்பியர் நகரில் உள்ள மெக்லாரன் பார்க் மைதானத்தில் கிழக்கிலிருந்து மேற்காக ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் இடைவெளி ஏற்பட்டதால் ஆட்டத்தில் ஓரு ஓவர் குறைக்கப்பட்டு போட்டி தொடர்ந்தது.வெற்றி இலக்கு 156 ரன்களாக மாறியது். 11ஆம் ஓவரின், ஜந்தாம் பந்தில் தவன் கொடுத்த கேட்ச் ஒன்றை விக்கெட் கீப்பர் டாம் லாதம் தவறான கணிப்பால் தவறவிட்டார். இந்த போட்டியின்போது தவன் 5000 ரன்களை கடந்தார். அதன்மூலம், லாராவின் 118 இன்னிங்ஸ் எண்ணிக்கையை தவன் சமன் செய்தார். அந்த வகையில், முதல் மூன்று இடங்களை ஆம்லா (101 இன்னிங்ஸ் ) ரிச்சட்ஸ் மற்றும் கோலி ஆகியோர் பிடித்திருக்கின்றனர். 

இதன் பின்னர் ஸ்கோர் 133ஆக இருந்தபோது 28ஆம் ஓவரின் நான்காம் பந்தில் கோலி 45 ரன்களில் ஆட்டமிழந்தார். 59 பந்துகளை சந்தித்த கோலி 3 பவுண்டரிகள் அடித்திருந்தார். லோகி ஃபெர்குசன் இந்த விக்கெட்டை கைப்பற்றினார். இறுதியில் இந்தியா வெற்றி இலக்கான 156 ரன்களை 34.5 ஓவர்களில் எட்டியது. தவன் 103 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்தும், ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டக்வோர்த் லீவிஸ் ஸ்டெர்ன் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா. முகமது ஷமி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இத்தொடரின் அடுத்த போட்டி இந்திய குடியரசு தினமான வரும் 26-ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெறவிருக்கிறது.