நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் கருணாஸ்

 

நிபந்தனை ஜாமீனில்  விடுதலையானார் கருணாஸ்

தமிழக முதல்வர், காவல்துறையை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட  எம்.எல்.ஏ கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து இன்று காலை விடுதலையானார்.

வேலூர்: தமிழக முதல்வர், காவல்துறையை அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட  எம்.எல்.ஏ கருணாஸ் வேலூர் சிறையில் இருந்து இன்று காலை விடுதலையானார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை குறித்துத் தரக்குறைவாக பேசினார்,இதன் காரணமாக கருணாஸ் மீது 8பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதில் சென்னையில் ஐபிஎல் போட்டியின் போது ரசிகர்களைத் தாக்கிய வழக்கும் அடங்கும்.

அதனைத் தொடர்ந்து, 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் அவரைத் தேடினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், தான் தலைமறைவாகவில்லை எனவும், தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விடவும் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த 23ஆம் தேதி சென்னை சாலிகிராமத்திலுள்ள கருணாஸ் வீட்டிற்குக் காவல்துறையினர் அதிரடியாகச் சென்று அவரைக் கைது செய்தனர். 

இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றம் நேற்று கருணாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ் இன்று காலை ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். அவதூறாகப் பேசிய வழக்கில் தினமும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களைத் தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கருணாஸுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கருணாஸ் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.