நினைத்ததை சாதித்த முகேஷ் அம்பானி… பணத்தை கொட்டும் ஜியோ….

 

நினைத்ததை சாதித்த முகேஷ் அம்பானி… பணத்தை கொட்டும் ஜியோ….

முகேஷ் அம்பானி நினைத்தது மாதிரியே ஜியோ நிறுவனம் லாபத்தை கொட்ட தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் ஜியோவின் நிகர லாபம் ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது.

2016 செப்டம்பர் 5ம் தேதியன்று முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்தது. தொலைத்தொடர்பு துறையின் தலையெழுத்தை ஜியோ மாற்றி எழுதபோகிறது என்பதை அப்போது யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். முதலில் வாடிக்கையாளர்கள் வந்தால் பின்னால் லாபம் தன்னால் வந்து விடும் என்று கணக்கு போட்டு முகேஷ் அம்பானி செயலில் இறங்கினார்.  ஜியோ நிறுவனம் இலவச அழைப்பு மற்றும் டேட்டா சலுகைகளை அறிவித்து குறுகிய காலத்திலேயே பல கோடி வாடிக்கையாளர்களை பெற்றது. 

முகேஷ் அம்பானி

ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளியேறி விட்டன. பல காலாண்டுகள் எந்தவித வருமானத்தையும் எதிர்பார்க்காமல் இலவச சலுகைகளை அறிவித்து பல கோடி வாடிக்கையாளர்களை ஜியோ தன் பக்கம் இழுத்தது. பின் மெல்ல மெல்ல வருவாய் ஈட்டும் நடவடிக்கையில் இறங்கியது. இப்போது ஜியோ நிறுவனம் அம்பானி நினைத்த மாதிரியை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் காமதேனுவாக விளங்குகிறது. கடந்த மார்ச் காலாண்டில் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.2,331 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 மார்ச் காலாண்டைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகமாகும். 2020 மார்ச் இறுதி நிலவரப்படி ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.75 கோடியாக உள்ளது. அந்த காலாண்டில் ஒவ்வொரு ஜியோ சந்தாதாரரும் மாதந்தோறும் தொலைத்தொடர்பு சேவைக்காக சராசரியாக ரூ.130.60 செலவிட்டுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது.