நினைச்ச உடனே தூக்கி போட்டு போக முடியாது! ராகுலுக்கு செக் வைத்த வீரப்ப மொய்லி!

 

நினைச்ச உடனே தூக்கி போட்டு போக முடியாது! ராகுலுக்கு செக் வைத்த வீரப்ப மொய்லி!

காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் ராகுல் காந்தி தலைவர் பதவியிலிருந்து விலக முடியும் என வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ராகுல் காந்தி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தார். இருந்தாலும் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்தின.

காங்கிரஸ்

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாள், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். ஆனால் அதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்தான் தலைவராக நீடிப்பார் என்று கூறினார். ஆனால் ராகுலோ ராஜினாமா செய்வது உறுதி என்றும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் நான் தலையிட மாட்டேன் என்று அண்மையில் கூறிவிட்டார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் ராஜினாமா குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராகுல் காந்தி தலைவர் பதவிக்கே வந்ததே 2017ல்தான். அவரது தலைமையில்தான் கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச தேர்தல்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்தான் ராகுலின் திட்டங்கள் வெற்றிபெறவில்லை. இந்த தோல்விக்கு ஒரே ஒரு தலைவரை காரணமாக நான் கருதவில்லை. தோல்விக்கான பொறுப்பை எல்லோரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வீரப்ப மொய்லி

தோல்விக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்வதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதேசமயம் அவர் தடாலடியாக பதவி விலகுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. விரைவில் 3 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளது. எனவே அவர் பதவி விலகுவதில் உறுதியாக இருந்தாலும் இந்த நேரத்தில் அது நடக்காது. கட்சியை மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்  கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்த பிறகுதான் அவர் பதவி விலகுவார். இவ்வாறு அவர் கூறினார்.