நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி: வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 

 

நாளை மூன்றாவது ஒருநாள் போட்டி: வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா? 

நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் முறையே 8 விக்கெட் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

 – குமரன் குமணன்

இந்திய நேரப்படி போட்டி தொடங்கும் நேரம்: காலை 7.30 

நியூசிலாந்து நேரம்: பிற்பகல் 3 மணி 

நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் முறையே 8 விக்கெட் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

நாளை மவுண்ட் மவுங்கானுய் நகரின் பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றால் அந்த வெற்றி,தொடர் இந்தியா வசம் ஆவதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் கடந்த 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணத்தில் 4-0 என்ற கணக்கில் கண்ட படுதோல்விக்கு பதிலடியாக அமையும்.

india

ஹர்திக் அணிக்கு திரும்பியிருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அப்படி நடந்தால் விஜய் ஷங்கர் இடம்பெற மாட்டார். ராயுடுவுக்கு மாற்றாக ஷுப்மன் கில் களமிறக்கப்படலாம். பேட்டிங் இன்னிங்ஸின் மத்திய பகுதியில் ரன் குவிப்பில் வேகம் தேவை என கோலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்டத்தில் ராயுடு 47 ரன்கள் எடுத்திருந்தாலும் அந்த 47 ரன்களை எடுக்க அவர் 49 பந்துகள் எடுத்துக்கொண்டதையும் அவற்றில் 18 ரன்கள் (3 பவுண்டரி ஒரு சிக்ஸர்) மட்டுமே அவ்வாறு வந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

முதல் போட்டியிலும் கூட குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய சமயத்திலும் 23 பந்துகளில் 13 ரன்களை அடித்தார் ராயுடு. தோனி கூட மிதமாக தொடங்கினார் என்றாலும் ,கடைசி கட்ட அதிரடி மூலம் அதை சரி செய்ய தெரிந்தவர் என்பதால் சிக்கல் ஏற்படவில்லை. அதே சமயம் ,ஜந்தாவது பேட்ஸ்மேனாக அவர் களம் இறங்கும் முன் ஆட்ட நிலவரம் என்ன என்பது முக்கியமாகிறது.

நான்காம் நிலையில் இன்னும் ஸ்திரத்தன்மை பிடிபடாததால் கோலியே ஒருவகையில் இரண்டு பேட்ஸ்மேன்களுக்கான வேலையை செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். இதனால் அவரது பாணியிலான ஆட்டம் இரு போட்டிகளிலும் வெளிப்படவில்லை. இந்த ஒரே ஒரு விஷயத்தை தவிர இந்திய அணி பலம் மிக்கதாகவே காணப்படுகிறது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே எதிர்பாராத அளவு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவர்கள் உலக கோப்பை தொடருக்கு முன் சரியான XIஐ கண்டுபிடித்துவிடும் முனைப்பில் உள்ளனர். இந்திய அணியை போலவே நியூசிலாந்தும் தங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரையும் களமிறக்க வாய்ப்பு உள்ளது. டக் பரேஸ்வேல் அல்லது டிம் சவுதி ஆகியோரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார். 

நாளைய போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் நியூசிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடித்திருக்க முடியும். கடைசி இரு போட்டிகளுக்கு கோலிக்கு ஒய்வளிக்கபபட்டதால் அவர் இருக்க மாட்டார் என்பதை சாதகமாக பயன்படுத்த ,நியூசிலாந்து இப்போட்டியில் வெல்ல வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

அதே சமயம், தான் விளையாடும்போதே தொடரின் வெற்றி உறுதி செய்யப்பட வேண்டும், தன் முத்திரையாக ஒரு ஆட்டம் ஆடிவிட்டு இந்தியா திரும்ப வேண்டும் என்று கோலியும், கடந்த இரு போட்டிகளில் அளித்த சிறப்பான பங்களிப்பைத் தொடர வேண்டும் என அணியின் மற்ற வீரர்களும் நினைப்பார்கள் என்பதால் நாளைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.