நாளை நிலவில் இருள் சூழ்ந்து விடும்! கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

 

நாளை நிலவில் இருள் சூழ்ந்து விடும்! கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்

நாளை நிலவில் இருள் சூழ்ந்து விடும் என்பதால், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில், இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதியன்று  சந்திரயான் 2வை விண்ணில் ஏவியது. சந்திரயான் 2 திட்டமிட்டப்படி தனது பயணத்த மேற்கொண்டது. முதலில் சந்திரயான் 2விலிருந்து ஆர்பிட்டர் கழற்றிவிடப்பட்டது. அது தற்போது நிலவை சுற்றி வருகிறது. கடந்த 7ம் தேதி அதிகாலையில் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் கடைசி நேரத்தில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கி.மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இஸ்ரோ

இதனால் சந்திரயான் 2 மிஷன் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் ஆர்பிட்டர் உதவியுடன் நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அதனுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லையென்றால் பின் எப்போதும் அதனுடன் தொடர்பு கொள்ள முடியாது என சிக்கலான நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.

சந்திரயான் 2

நிலவின் ஒருநாள் என்பது 655 மணி நேரத்துக்கு சமம்.அதன்படி பார்த்தால் சுமார் சுமார் 328.5 மணி நேரத்துக்கு பிறகு (பூமி கணக்குப்படி 14 நாட்களுக்கு பிறகு) இரவு ஆரம்பித்து விடும். விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கி 13 நாட்கள் தாண்டி விட்டது. ஆகையால் இன்னும் 24 மணி நேரத்தில் விக்ரம் லேண்டருடன் கட்டாயம் தொடர்பு கொள்ள வேண்டும். நாளை நிலவில் இருள் சூழ தொடங்கி விடும் அதன்பிறகு விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் கடைசி கட்ட முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.