நாளை தொடங்குகிறது மெல்பேர்ன் டெஸ்ட்: 37 ஆண்டுகால ஏக்கம் தணியுமா?

 

நாளை தொடங்குகிறது மெல்பேர்ன் டெஸ்ட்: 37 ஆண்டுகால ஏக்கம் தணியுமா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 – குமரன் குமணன்

மெல்பேர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமநிலைக்கு கொண்டு வந்தது . இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்ன் நகரில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இத்தொடரை சோனி சிக்ஸ் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

indian team

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான “பாக்ஸிங் டே” அன்று பரிசுகள் அளிக்கும் வழக்கம் பல நாடுகளில் உள்ளது. பல வகை பணியாளர்களுக்கு முதலாளிகள் பரிசு வழங்கும் நாள் அது. கிரிக்கெட் வரலாற்றிலும் அந்நாளுக்கு முக்கிய இடமுண்டு. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் டெஸ்ட் போட்டிகள் தொடங்குவது வழக்கம்.

ஆஸ்திரேலியாவில் 1950ஆம் ஆண்டு முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சில காரணங்களால் சில ஆண்டுகள் போட்டியை நடத்த முடியாமல் போனது. இருப்பினும் 1980ஆம் ஆண்டு முதல் பாக்ஸிங் டே போட்டி தவறாது நடைபெற்று வருகிறது. தற்போது 90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானம் உலகின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்திய பெருமைக்குரியதாகும். இதுவரை அங்கே நடந்த 110 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா 63ல் வெற்றியும் 30ல் தோல்வியும் கண்டுள்ளது. 17 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 2010ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலிய அணி மெல்பேர்னில் தோற்றதில்லை.

aus

2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 624 ரன்கள் குவித்தது ஓரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக பதிவானது ஆஸ்திரேலிய அணி மூன்று முறை அந்த மைதானத்தில் 600 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறது. 1936ல் தென் ஆப்பிரிக்கா 36 ரன்களுக்கு சுருண்டது குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

இந்திய அணி மெல்போர்னில் 12 டெஸ்ட்போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது. 1977 மற்றும் 1981ஆம் ஆண்டுகளுக்கு பின் அங்கு வெற்றி பெறவில்லை. 2014ஆம் ஆண்டு கோலி மற்றும் ரகானேவின் சதங்களால் இந்தியா போட்டியை டிரா செய்தது. இவர்கள் இருவரை தவிர ஷேவாக், தெண்டுல்கர் உட்பட மேலும் ஆறு இந்தியர்கள் மெல்போர்னில் சதம் அடித்துள்ளனர். ஆனால் அவற்றில் எதுவும் இரட்டை சதமாக மாறவில்லை.

virat

2017ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் மெல்போர்ன் டெஸ்ட் டிராவில் முடிந்து, அதில் 24 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்ததால் ஐ.சி.சி தரப்பில் மோசமான ஆடுகளாமாக முத்திரை குத்தப்பட்டது. தற்போது மாற்றப்பட்டுள்ள ஆடுகளம் ,வேகப்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் உயிரோட்டமானதாக இருக்கும் என வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.