நாளை தொடங்குகிறது பெர்த் டெஸ்ட்: புதிய மைதானத்தின் ஆடுகளம் பழம்பெருமையை காக்குமா?

 

நாளை தொடங்குகிறது பெர்த் டெஸ்ட்: புதிய மைதானத்தின் ஆடுகளம் பழம்பெருமையை காக்குமா?

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நாளை தொடங்குகிறது

-குமரன் குமணன்

பெர்த்: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நாளை தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற 20 ஓவர் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து, அடிலெய்டு நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரண்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம், முதல் முறையாக ஆஸ்திரேலிய பயணத்தின் போது டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

இந்நிலையில் நாளை பெர்த் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. புகழ்பெற்ற WACA எனப்படும் Western Australian Cricket Association மைதானம் தான் இதுவரை பெர்த் நகரி்ல் சர்வதேச போட்டிகளுக்கான பிரதான இடமாக இருந்து வந்தது. 1970-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அங்கு சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. கிரிக்கெட் தவிர பிற விளையாட்டுக்களும் அங்கே அரங்கேறியது உண்டு. 

அதன் பிறகு அந்த மைதானம் இடிக்கப்பட்டு, பெர்த் நகருக்கான புதிய களமாக “பெர்த் ஸ்டேடியம்” மைதானம் உருவானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான தொடரில் ஒருநாள் போட்டி ஓன்றும், பின்னர் நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டியையும் இந்த மைதானம் கண்டுள்ளது.

ground

நாளை இந்தியா விளையாட இருக்கும் போட்டியே இந்த மைதானம் காணவுள்ள முதல் டெஸ்ட் போட்டி. இதுகுறித்து ஆடுகள பராம்பரிப்பாளர் கூறுகையில், “பந்து பவுன்ஸ் ஆவதற்கு ஏற்ப ஆடுகளத்தை தயாரிக்கும்படி கோரப்பட்டுள்ளது. எனவே, பவுன்ஸ் மிக அதிகமாக இருக்குமாறு ஆடுகளத்தை தயார் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்த மைதானத்தில் நடைபெற்ற மாகாண அளவிலான போட்டி ஒன்றில் விழுந்த 40 விக்கெட்டுகளில் 32 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தி இருந்தனர் .அதே சமயம் நியூ சவுத் வேல்ஸ் பேட்ஸ்மேன் கர்டிஸ் பேட்டர்ஸன் அடித்த சதம், இந்த மைதானத்தில் ரண்களையும் எடுக்கக் கூடிய சாத்தியங்களை வெளிக் காட்டியுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணிகளில் பந்து வீச்சாளர்கள் பல சாதனைகள் படைத்ததும், பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்கவே நடுங்கியதும் வரலாறு. அப்படி ஓரு சரித்திர புகழை புதிய களத்தில் நிலைநாட்ட இந்தியா – ஆஸ்திரேலியா என இரு அணி வேகப்பந்து வீச்சாளர்களும் கைகளை உயர்த்த காத்திருக்கின்றனர். நாமும் தான் பார்க்க காத்திருக்கிறோம்.