நாளை கொடியேற்றத்துடன் துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா | – உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்

 

நாளை கொடியேற்றத்துடன் துவங்கும் வேளாங்கண்ணி திருவிழா | – உச்சக்கட்ட பாதுகாப்பில் தமிழகம்

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடும் வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா, 

velankanni

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். வருடந்தோறும் வெகு விமர்சையாக வேளாங்கண்ணி பேராலயம் நடத்தும் இந்த திருவிழாவில், மாதாவின் அருளைப்பெற லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும், எல்லா மதத்தினரும் நம்பிக்கையுடன் வந்து வழிபட்டுச் செல்லும் ஆன்மிக தலமாகவும் விளங்கும் இந்த ஆலயம், கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என்ற பெருமையுடன் விளங்குகிறது. 
பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டட அமைப்பில் இந்தியாவிலுள்ள ஐந்து கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாகவும் திகழும் வேளாகண்ணி ஆலயத்தில், மாதா பிறந்தநாளை ஆண்டுத் திருவிழாவாக 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி, அடுத்த மாதம் செப்டம்பர் 7 -ம் தேதி நடைபெறும்.
இதுபற்றி பேராலய அதிபர் பிரபாகரனிடம் பேசினோம். “இத்திருவிழாவை நாளை, ஆகஸ்ட் 29-ம் தேதி, தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மாதாவின் சொரூப கொடியை ஏற்றி தொடங்கிவைக்கிறார். விழா நடைபெறும் நாட்களில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், மராட்டி, கொங்கனி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும். பல்வேறு ஊர்களிலிருந்து 40 நாள்கள் விரதமிருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இந்த ஆண்டு அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கிறோம். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு சுகாதாரம், கழிவறை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பேராலயம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

police

பக்தர்களின் வசதிக்காக சிறப்புக் கட்டண ரயில்களும், 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 400 – க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதில் தொடர்புடைய தீவிரவாதிகள் தற்போது தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
எனவே, வேளாங்கண்ணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  140 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. பேராலயத்தைச் சுற்றிலும் 6 போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, கடல்வழியே பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால், 2 அதி நவீன விரைவு ரோந்துப் படகுகள் மூலம் கடலோர பாதுகாப்புப்படை கண்காணித்து வருகிறது.