நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா இந்தியா?

 

நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி: தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் நகரில் நாளை தொடங்கவுள்ளது

-குமரன் குமணன்

அடிலெய்ட்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்ட் நகரில் நாளை தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. இதனால், அடிலெய்ட் நகரில் இந்திய நேரப்படி நாளை காலை 8.50 மணிக்கு தொடங்கவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது.

ஆஸ்திரேலிய XI-ல் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், கலீல் அஹமத் , ஜடேஜா ஆகியோருக்கு பதில் யுசுவேந்திர சஹால், கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் ஆகியோர் சேர்க்கப்படலாம். இந்த மாற்றங்களில் ஏதேனும் ஒன்று நிகழ்வது நிச்சயம். விஜய் ஷங்கர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஹர்திக் பண்ட்யாவுக்கு மாற்றாக ஆஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதஹாஸ் இருபது ஒவர் தொடரில் இந்திய அணியில் நுழைந்தவர் தமிழக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர். லோகேஷ் ராகுலுக்கு பதில் சேர்க்கப்பட்ட புதுமுக வீரர் ஷுப்மன் கில், நியூசிலாந்து செல்லும் இந்திய குழுவுடன் இணைவார் என தெரிவிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியதில் முக்கிய பங்காற்றியவர் கில் என்பது முக்கிய அம்சமாகும்.

ஒருவேளை அவருக்கு இந்திய XIல் உடனடியாக இடம் கிடைத்து நான்காம் நிலையில் களமிறக்கப்பட்டால், தற்போதைய நடுவரிசை பிரச்னைக்கு நீண்டகால தீர்வே கிடைத்துவிடும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அனைத்து வகை கிரிக்கெட்டிலும் தனது இன்னிங்ஸை போட்டியின் போக்கிற்கு ஏற்ப கட்டமைப்பதில் வல்லவராக திகழ்கிறார் கில்.

தொடரை வெல்ல வாய்ப்புடன் உள்ள ஆஸ்திரேலிய அணி, கடும் சரிவிலிருந்து போராடி தோற்ற இந்திய அணி என தொடரின் தற்போதைய நிலை அதீத சுவாரஸ்யத்தை எட்டியுள்ளது. விராட் கோலி முழுநேர தலைவராக பொறுப்பு ஏற்று நாளையுடன் இரண்டு ஆண்டு காலம் நிறைவடைகிறது. நாளை இந்தியா வெற்றி பெற்றால், அந்த தருணத்தை நினைவு கூறவும் உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் உத்வேகம் பெறவும் அது உதவியாக இருக்கும்.