நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி: முன்னிலையை தக்கவைக்குமா இந்தியா?

 

நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி: முன்னிலையை தக்கவைக்குமா இந்தியா?

இந்தியா நியூசிலாந்து அணிகளிடையேயான ஒருநாள் போட்டி தொடரின் இரண்டாவது ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெற உள்ளது

இந்தியா நியூசிலாந்து அணிகளிடையேயான ஒருநாள் போட்டி தொடரின் இரண்டாவது ஆட்டம் நாளை மவுண்ட் மவுங்கானுய் நகரில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் அண்மைக் காலத்தில் சந்திக்காத விசித்திரமான சவாலை கடந்த போட்டியில் எதிர்கொண்டது. சுழற்பந்து வீச்சை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி கடந்த போட்டியில் 157 ரன்களில் அந்த அணியை சுருட்டியது இந்தியா. குல்தீப் (4) சஹால் (2) மற்றும் ஜாதவ் (1) என மொத்தம் ஏழு விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் சரிந்தன. அதீத வெளிச்சம் காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டத்தில் டக்வோர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதியால் 49 ஓவர்களில் 156 ரன்களாக மாறிய இலக்கை இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 34.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது இந்தியா. இது தவிர்த்து, முகமது ஷமியின் துல்லியமான வேகப்பந்து வீச்சு அண்மைக்காலங்களில் நல்ல பலன் அளித்து வருகிறது.

இப்படி ஒரு சூழலில் இந்திய அணி XIல் நாளைய போட்டிக்கு மாற்றம் செய்யப்படும் வாய்ப்பு மிகக்குறைவு. ஆனால் இத்தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால் அப்போது மாற்றம் நிகழும்.

இதற்கிடையே நேற்று இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதால் ஹர்திக் நியூசிலாந்துக்கு செல்லவிருக்கிறார். அவர் மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது இந்திய குழுவுடன் இணைந்து கொள்வார் என தெரிகிறது. லோகேஷ் ராகுலுக்கும் தடை நீங்கியுள்ளது. ஆனால் அவர் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலேயே தங்கியிருப்பார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் செயல்பாட்டை பார்த்து நியூசிலாந்து அணிக்குள்ளும் சுழற்பந்து வீச்சை பலப்படுத்த அந்த அணி நிர்வாகம் நினைத்தால் லெக் ஸ்பின் பந்து வீச்சாளர் ஈஷ் சோதிக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் டக் ப்ரேஸ்வெல் நீக்கப்பட்டு கோலின் டி கிராண்ட்ஹோம் சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இத்தொடருக்கு முன் இலங்கை அணிக்கெதிராக ஆடிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் நடைபெற்றன. அவை அனைத்திலும் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முறையே 371/7 ,319/7 மற்றும் 364/4 என இமாலய அளவில் ரன்களை குவித்திருந்தது. இந்த இலக்குகளை துரத்திய இலங்கை அணி முதல் போட்டியில் 326 ரன்களையும் இரன்டாவது போட்டியில் 298 ரன்களையும் எடுத்து 45 மற்றும் 21 ரன்கள் வித்தியாம் வரை நெருங்கி வந்து தோற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய தொடரின் கடந்த போட்டிக்கு நேர் எதிராக இப்போட்டி அமைய வேண்டும் என்பதே நியூசிலாந்தின் நோக்கமாக இருக்கும். அப்படி ஓரு சவால் வந்தால் அதை எதிர்கொள்ள இந்திய அணியும் தயாராக இருக்கும்.