நாளை இரண்டாவது இருபது ஓவர் போட்டி; தொடரின் நிலை என்னவாகும்!?

 

நாளை இரண்டாவது இருபது ஓவர் போட்டி; தொடரின் நிலை என்னவாகும்!?

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளது

-குமரன் குமணன்

பெங்களூரு: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு 20 ஓவர் போட்டிகள் மற்றும் ஜந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இருபது ஒவர் போட்டியில் கடைசி பந்து வரை போராடியும் இந்திய அணி தோற்றது.

இந்நிலையில், இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இந்திய அணி உள்ளது.

2008-ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் இருபது ஓவர் தொடரை இழந்தது இல்லை. இந்த நிலையை தக்க வைக்க நாளை வென்றாக வேண்டிய நிலையிலும் இந்திய அணி உள்ளது.

கடந்த போட்டியில் தோனியின் பேட்டிங் மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சு ஆகிய இரண்டும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இதில் உமேஷ் யாதவ் மிகக் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். கடைசி 2 ஒவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது, 19-ஆம் ஓவரை வீசிய பும்ரா 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் கடைசி ஓவரை வீசிய உமேஷ், இரு பவுண்டரிகள் உட்பட 14 ரன்களை வாரி வழங்கினார்.

உமேஷ் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் இடம் கேள்விக்குறி ஆகியிருக்கும் நிலையில், கடந்த ஆட்டத்தில் விளையாடாத தவன் அணிக்கு திரும்பும் வகையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு தரப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், கடந்த ஆட்டத்தில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய குழுவில் மாற்றம் இருக்க வாய்ப்பு குறைவு.

பெங்களூரு நகரில் இவ்விரு அணிகளும் பங்கேற்கவுள்ள முதல் இருபது ஒவர் போட்டி இதுவாகும். ஆஸ்திரேலிய அணி, இதற்கு முன் M.சின்னசாமி மைதானத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு இருபது ஓவர் உலக கோப்பை தொடரின் போது, வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. சிறிய அளவிலான பெங்களூரு மைதானத்தில் ரன் மழை பொழியுமா என்பது நாளை இரவு 7 மணி முதல் தெரியவரும்.