நாளை அதிகாலை 1.55 மணிக்கு இந்திய தொழில்நுட்பத்தின் மிகமுக்கியமான தருணம்!

 

நாளை அதிகாலை 1.55 மணிக்கு இந்திய தொழில்நுட்பத்தின் மிகமுக்கியமான தருணம்!

சந்திரயான் 2-ல் இருக்கும் விக்ரம் லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும். ஆனால், அதை உறுதியாக தரையிறக்க வேண்டும். இது நுட்பமானது, மற்றும் நுணுக்கமானது. அதனால்தான் அதனைச்சுற்றி 4 எஞ்சின்களுடன் நடுவில் ஒரு எஞ்சினையும் பொருத்தியுள்ளோம் – கே.சிவன்

சந்திரயான் 2 விண்கலம், நாளை அதாவது இந்திய நேரப்படி செப்டம்பர் 7, 2019 அதிகாலை 1:55 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பல லட்சம் கிலோமீட்டர்கள் தூரத்தில் நடைபெறும் இந்த அறிவியல் சாதனைக்கு சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய தொழில்நுட்பத்தின் மற்றுமொரு மைல்கல் சாதனையாக இருக்கப்போகும் இந்த அரிய நிகழ்வு குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் செய்தியாளர்களிடம் வர்ணித்தார்.

ISRO Chairman K.Shivan

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ளதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது. உங்கள் கைகளில் திடீரென ஒரு பச்சிளம் குழந்தையை கொடுக்கிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த குழந்தையை பத்திரமாக நீங்கள் பிடித்திருக்க தடுமாறுவீர்கள். குழந்தை அங்கும் இங்கும் நகரும்போது அதை கீழேவிட்டுவிடாமல் கையாள மிகவும் கஷ்டப்படுவீர்கள் அல்லவா? அதேபோலதான், சந்திரயான் 2-ல் இருக்கும் விக்ரம் லேண்டரும் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும். ஆனால், அதை உறுதியாக தரையிறக்க வேண்டும். இது நுட்பமானது, மற்றும் நுணுக்கமானது. அதனால்தான் அதனைச்சுற்றி 4 எஞ்சின்களுடன் நடுவில் ஒரு எஞ்சினையும் பொருத்தியுள்ளோம்” என்று கூறியிருக்கிறார். நீங்க சாதிச்சு காட்டுவீங்க சிவன் சார்! வாழ்த்து சொல்ல தேசமே தயாராக இருக்கிறது.