நாய்கறி சர்ச்சை: இதுவரை 5 நபரை கைது செய்த ரயில்வே போலீசார்!

 

நாய்கறி சர்ச்சை: இதுவரை 5 நபரை கைது செய்த ரயில்வே போலீசார்!

மீன் எனக் கூறி கெட்டுப்போன ஆட்டிறைச்சியை கொண்டு வந்த விவகாரத்தில்  மேலும் 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை : மீன் எனக் கூறி கெட்டுப்போன ஆட்டிறைச்சியை கொண்டு வந்த விவகாரத்தில்  மேலும் 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த மாதம் 17-ம் தேதி வந்த ரயிலில், 12 பெட்டிகளில் கெட்டுப்போன நிலையில் ஆட்டிறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது.  முதலில், இது நாய் இறைச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, ஆய்வுக்கு உட்படுத்தியதில் அது ஆட்டிறைச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இவ்விவகாரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மீன் எனக் கூறி ஆட்டிறைச்சியை கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த கணேசன், ஜெய்சங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.மேலும், இறைச்சியை அனுப்பிய ஜோத்பூரைச் சேர்ந்த இம்ரான்கான், காந்திகிராமைச் சேர்ந்த முன்னா குரேஷி ஆகிய இருவரையும் கைது செய்த ரயில்வே போலீசார் அவர்களை  சென்னைக்கு  அழைத்து வந்தனர்.

இந்நிலையில்,  சென்னையில் இறைச்சியை பெற்றுக்கொள்ள வேண்டிய உஸ்மான் பாஷா என்பவரை கைது செய்தனர். அப்போது, இறைச்சியை மீன் எனக் கூறினால், அதிகாரிகள் அதைச் சோதனை செய்ய மாட்டார்கள் என்பதால், அவ்வாறு பதிவு செய்ததாக உஸ்மான் பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இவருடன், இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.