நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! 

 

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! 

அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல் : 

தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் ஆகும் . இக்கோயிலில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஞானசக்தியின் அம்சமாக விளங்குகின்றார்.

namakkal

இங்கு உள்ள ஆஞ்சநேயர் எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் பிரமாண்டமாகக் காட்சி தருகிறார்.இந்த ஆஞ்சநேயர் சிலை பீடத்தில் இருந்து 22 அடியும் பாதத்தில் இருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக அமைந்துள்ளது.

18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது என்பது இக்கோயிலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இங்கு ஆஞ்சநேயர் வெட்ட வெளியில் மழையிலும் வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

 

namakkal

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5 ஆம்  தேதி சனிக்கிழமை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. 

விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக வடைகள் தயாரிக்கும் பணி அங்குள்ள பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

namakkal

இந்த வடைகளை தயாரிக்க 2,250 கிலோ உளுந்தம் பருப்பும் மேலும் 650 கிலோ நல்ல எண்ணெய், 35 கிலோ மிளகு, சீரகம், உப்பு ஆகியவை பயன் படுத்தப்படுவதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.