நான் தலைவன் அல்ல; தொண்டனுக்கும் தொண்டன்: முதல்வருக்கு உதயநிதி பதிலடி

 

நான் தலைவன் அல்ல; தொண்டனுக்கும் தொண்டன்: முதல்வருக்கு உதயநிதி பதிலடி

திமுகவில் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே நான் நிற்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: திமுகவில் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே நான் நிற்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக திமுக நடத்தும் போராட்ட களங்களில் தென்படுகிறார். அதேசமயம் உதயநிதியை மூன்றாவது கலைஞர் என கட்சியினர் சிலர் கூற நெட்டிசன்கள் கடுமையாக அவரை கலாய்த்து வந்தனர். மேலும், சில திமுக மேடைகளில் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெறாமல் அவரது புகைப்படம் மட்டும் இடம்பெற்றிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என உதயநிதி விளக்கமளித்திருந்தார்.

இதற்கிடையே திமுக – காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து, சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின் வந்தார் தற்போது அவருக்கு பின்னால் அவரது மகனான உதயநிதி ஸ்டாலின் லைனில் வந்திருக்கிறார். திமுக ஒரு கட்சியே இல்லை அது ஒரு கம்பெனி என கடுமையாக விமர்சித்து பேசினார்.

 

இந்நிலையில், சசிகலா காலில் முதல்வர் பழனிசாமி விழும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பகிர்ந்து வரிசையில் தான் நிற்கின்றேன், கலைஞரின் உயிரினும் மேலான இயக்கத்தின் கடைமட்ட தொண்டனுக்கு பின்னால், தலைவனாய் அல்ல, அவனுக்கும் தொண்டனாய் சேவை ஆற்றவே! சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளி கூட தகுதி இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.