நான் சொன்னதுதான் சரி- மோடி அரசுக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் சுப்பிரமணியன்….

 

நான் சொன்னதுதான் சரி- மோடி அரசுக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் சுப்பிரமணியன்….

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 4.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கும் என முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீண்டும் உறுதியாக கூறினார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( பொருளாதார வளா்ச்சி) வளர்ச்சியை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டு, தரவு ஆதார மூலங்கள் மற்றும் முறையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசு மாற்றியது. அதற்கு முன் 2004-05 நிதியாண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்பட்டு வந்தது. 2015 ஜனவரி முதல் மத்திய புள்ளியல் அலுவலகம் 2011-12 நிதியாண்டை புதிய அடிப்படை ஆண்டாக கொண்டு பொருளாதார வளர்ச்சி கணக்கிடப்படுகிறது.

மோடி

மத்திய புள்ளியல் அலுவலகம் 2015ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2011-16 கால கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதம் மிகையாக கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஜூன் மாதம் ஒரு அறிக்கையில் கூறியிருந்தார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதனையடுத்து, கணக்கீடு காலத்தில் நாட்டில் உற்பத்தி திறன் மற்றும் நுகர்வு அதிகமாக இருந்தது அதனால் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்தது. ஆனால் அரவிந்த் சுப்பிரமணியன் தான் சொன்ன கருத்தில் உறுதியாக உள்ளார். அது குறித்து அவர் கூறியதாவது: புதிய அடிப்படை ஆண்டு, புதிய டேட்டா மற்றம் புதிய கணக்கிடும் முறையில் 2015ல் மத்திய புள்ளியல் அலுவலகம் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை வெளியிட்டது. அதனை நானும் எனது குழுவும் கவனமாக ஆய்வு செய்தோம்.

மத்திய புள்ளியல் அலுவலகம்

பின் உடனடியாக புதிய மதிப்பீடு குறித்து கேள்விகள் கேட்டோம். தொடர்ந்து அதனை விசாரணை செய்தோம். ஆனால் திருப்தி அளிக்கும் பதில்கள் கிடைக்கவில்லை. இதனையடுத்து 2015 பொருளாதார ஆய்வறிக்கையில் எங்களது சந்தேகங்களை குறிப்பிட்டோம். நிறுவனங்களுக்கான கடன் குறைந்தது, ஏற்றுமதி வீழ்ச்சி, உண்மையான இறக்குமதி குறைந்தது, வறட்சி மற்றும் ரூபாய் தடை போன்ற மிகப்பெரிய பாதகமான நிகழ்வுகள் நிகழ்ந்த பிறகும் பொருளாதார வளர்ச்சி சிறிதுதான் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உற்பத்தி திறன் அதிகரிப்பால் நிறுவனங்களுக்குதான் லாபம், அரசு கூறும் நுகர்வு அதிகரிப்புக்கும், ரிசர்வ் வங்கி நிதிகொள்கை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நுகர்வோர் நம்பிக்கை சர்வேக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. எனவே 2011-16 காலத்தில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என்ற அளவில்தான் இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.