நான் ஏழாவது பாஸுண்ணே, நீங்க எஸ்.எஸ்.எல்.சி. பெயிலுண்ணே! குருமூர்த்தி கிச்சுகிச்சு

 

நான் ஏழாவது பாஸுண்ணே, நீங்க எஸ்.எஸ்.எல்.சி. பெயிலுண்ணே! குருமூர்த்தி கிச்சுகிச்சு

குருமூர்த்திக்கு நம்முடைய சிம்பிள் கேள்வி இதுதான். தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலோ அல்லது ஒன்றிரண்டு தொகுதிகளிலோ வெற்றிபெற்று, அதிமுக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோற்று இருந்தால்தானே அது அதிமுகவுக்கு எதிரான அலையாக இருக்க முடியும்?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி தோல்வி குறித்து சிறுகுறிப்பு வரைகன்னு உங்களை ஏதாச்சும் இன்டர்வியூவ்ல கேட்டாங்கன்னா, யாராயிருந்தாலும் என்ன சொல்லுவாங்க? இந்தியா முழுக்க பாஜக அசால்ட்டாக வெற்றிபெற்றது , தமிழகம், ஆந்திரா, கேரளா நீங்கலாகன்னுதானே பதில் சொல்லுவாங்க? ஆனா, எல்லாரும் யோசிக்கிற மாதிரி யோசிச்சா அப்புறம் ஆடிட்டிங் படிச்சவங்களுக்கு என்ன மரியாதை? குருமூர்த்தி வித்தியாசமாக ஒரு கணக்குப் போட்டு ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் தோல்வி அதிமுகவுக்குத்தான், பாஜக எதிர்ப்பலை எல்லாம் கிடையாதுன்னு.

Gurumurthy

அவருடைய ட்வீட் பதிவு இதுதான்: “அ.தி.மு.க. 2 தொகுதிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும், 5 தொகுதிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும், மற்றொரு 5 தொகுதிகளில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. பா.ஜ.க. 2 தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளில் தான் வெற்றியை இழந்திருக்கிறது. இதேபோல 1 தொகுதியில் 3 லட்சத்துக்கும் குறைவான வாக்குகளிலும், இன்னொரு தொகுதியில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளிலும் தோல்வி அடைந்திருக்கிறது. மோடிக்கு எதிரான அலை என்றால் பா.ஜ.க. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 4 முதல் 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கும். அப்படியென்றால் யாருக்கு எதிரான அலை இது?”

ADMK BJP Alliance

குருமூர்த்திக்கு நம்முடைய சிம்பிள் கேள்வி இதுதான். தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளிலோ அல்லது ஒன்றிரண்டு தொகுதிகளிலோ வெற்றிபெற்று, அதிமுக போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோற்று இருந்தால்தானே அது அதிமுகவுக்கு எதிரான அலையாக இருக்க முடியும்? இந்தியா முழுக்க வெற்றிபெற்ற ஒரு கட்சி தமிழ்நாட்டில், தான் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது மட்டுமில்லாமல், முந்தைய தேர்தலில் வென்ற 36 தொகுதிகளையும் கூட்டணி கட்சி இழப்பதற்கும் காரணமாக இருந்தது என்றால் அது அதிமுக தவறா அல்லது பாஜக எதிர்ப்பலையா?