‘நான் என் பாதையில் செல்கிறேன்.. வருபவர்கள் வரட்டும்’ – சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் முதலமைச்சர்!

 

‘நான் என் பாதையில் செல்கிறேன்.. வருபவர்கள் வரட்டும்’ – சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் முதலமைச்சர்!

தனக்கென ஒரு பாதை வகுத்து அதில் பயணிப்பதாகவும், தினகரன் உள்ளிட்ட சசி குடும்பத்தினருக்கு அதில் இடமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: தனக்கென ஒரு பாதை வகுத்து அதில் பயணிப்பதாகவும், தினகரன் உள்ளிட்ட சசி குடும்பத்தினருக்கு அதில் இடமில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு நிரம்பிய அரசியல் பிரமுகருமான செந்தில் பாலாஜி, தினகரனை விட்டு விலகி, ஸ்டாலினிடம் ஐக்கியமாகியுள்ளார். செந்தில் பாலாஜியின் வருகையால், கொங்கு மண்டலத்தில் திமுகவின் வாக்குவங்கி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

senthil

செந்தில் பாலாஜி மட்டுமல்லாமல், அமமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், மீண்டும் அதிமுகவிற்கு செல்லலாமா? அல்லது திமுகவில் தஞ்சம் அடையலாமா? என்ற கோணத்தில் சில ஆலோசனைகளை நடத்தியுள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் உளவுத்துறை மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காதுகளுக்கு சென்றுள்ளது.

ஒருவேளை அமமுக முக்கிய நிர்வாகிகள், அடுத்தடுத்து திமுகவில் இணைந்துவிட்டால், அது அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என முதல்வர் கருதியுள்ளார். அதன் வெளிப்பாடாகவே, தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்பலாம் என வெளிப்படையாகவே தினகரன் அதிருப்தியாளர்களுக்கு முதல்வரும், அமைச்சர்களும் மாறி மாறி அழைப்பு விடுக்கின்றனர்.

mk stalin

அதன் நீட்சியாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் ரிலாக்ஸாக பேசிய முதல்வர், “தினகரனிடம் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் பலர் நம்மிடம் வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்களை இத்தனை நாட்களாக எப்படியெல்லாம் தினகரன் முட்டாளாக்கியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. நம்மிடம் பேசுகிறவர்கள், ‘தினகரனையும் எங்களோடு கூட்டிக் கொண்டு வரட்டுமா?’ என்கிறார்கள். `கட்சி நடத்த முடியவில்லை; தினகரனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்பது போலப் பேசுகின்றனர். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு நம்மால் எப்படி அரசியல் செய்ய முடியும். அவரையும் சசிகலாவையும் இங்கிருந்து அனுப்புவதற்குள் படாதபாடுபட்டோம். 

edappadi

தேர்தல் வந்தால் எனக்கு எதிரான ஓட்டுக்களைத்தான் தினகரன் பிரிப்பார். இந்த 20 மாதத்தில் ஸ்டாலினுக்கு எதிராகப் பேசியதைவிட, எனக்கு எதிராகத்தான் அவர் நிறைய பேசியிருக்கிறார். அவருக்கு வரக் கூடிய வாக்குகள் அனைத்தும் எனக்கு எதிரானவை. அவரைச் சேர்த்துக் கொள்வதால் நமக்கு எந்தவித லாபமுமில்லை. ஸ்டாலினுக்கு போகக் கூடிய இந்த ஓட்டுக்களை தினகரன் பிரிப்பது இரட்டை இலைக்கு லாபம்தான்.

என்றைக்கு அவர்கள் அனைவரும், “அம்மா டம்மி. சின்னம்மா தான் எல்லாம்” எனப் பேசினார்களோ, அப்போதே அம்மா சென்டிமெண்ட் எல்லாம் முடிந்துவிட்டது. இந்தக் கட்சிக்குத் தலைவர்களாக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இருக்கிறார்கள். சசிகலா தான் தலைவர் எனச் சொல்லிக் கொண்டு அவர் அரசியல் செய்து கொள்ளட்டும். 

ttv

நான் என்னுடைய பாதையில் செல்கிறேன். இந்தப் பாதைக்குள் வருகிறவர்கள் வரட்டும். இதில், தினகரனையும் சேர்த்து அழைத்து வருகிறோம் என்றெல்லாம் பேசக்கூடாது” என தெளிவாக பேசியுள்ளார்.

இவ்வாறு அடுத்தடுத்த அடிகளை மிக ஜாக்கிரதையாக எடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமி, குறுகிய கால அரசியலை விடுத்து, தேர்தல் அரசியலை நோக்கி நகர்வதாகவே அரசியல் நோக்கர்கள் பலரும் கருதுகின்றனர். ஏனெனில், தினகரனை அதிமுகவிற்குள் நுழைய விடாமல் அடுத்த தேர்தலை சந்திப்பது எளிதல்ல என்பதை நன்கு உணர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி.