நான் எத்தனை நாள்கள் உயிருடன் வாழ்வேன் எனத் தெரியாது : கர்நாடக முதல்வர் கண்ணீர் பொங்க பேச்சு!

 

நான் எத்தனை நாள்கள் உயிருடன் வாழ்வேன் எனத் தெரியாது : கர்நாடக முதல்வர் கண்ணீர் பொங்க பேச்சு!

நான் எத்தனை நாள்களுக்கு உயிரோடு இருப்பேன் எனத் தெரியாது. நான் உயிரோடு இருப்பதே மக்களுக்குச் சேவை செய்யத்தான் என்று எனக் கர்நாடக முதல்வர் குமாரசாமி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பலத்த போராட்டங்களுக்கு நடுவே காங்கிரஸின் ஆதரவோடு முதல்வரானார் குமாரசாமி. இருப்பினும் அங்கு பாஜக அதிக இடங்களைப் பெற்றுள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. குமாரசாமி முதல்வரான பிறகு தான் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களில் அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிடுகிறார். சில சமயங்களில் மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதும் விடுகிறார்.

karnataka

இந்நிலையில் மக்களவை இடைத்தேர்தலுக்கான மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் சிவராமே கௌடாவை ஆதரித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், ‘ கடவுளின் அருள் மற்றும் காங்கிரஸின் ஆதரவால்தான் நான் முதல்வராக உள்ளேன். நான் நேற்று முன்தினம் கூட மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். எதற்காகச் சென்றேன் என்பதைக் கூறமாட்டேன். ஆனால் ஒருவேளை நான் மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டால் உயிருடன் இருந்தும் இறந்ததற்கே சமம். பணம் சம்பாதிப்பதற்காகவோ மக்களின் வரிப்பணத்தைத் திருடுவதற்காகவோ முதல்வராகவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘நான் பல முறை கூறியிருக்கிறேன் கடந்த ஆண்டு என் இஸ்ரேல் பயணத்தின் போதே நான் இறந்திருக்கவேண்டியது. ஆனால் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் நான் உயிருடன் திரும்பி வந்தேன். நான் எத்தனை நாள்கள் உயிருடன் வாழ்வேன் என்பது முக்கியமில்லை. எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு எத்தனைக் குடும்பங்களுக்கு உதவி செய்தேன் என்பதுதான் முக்கியம். நான் சென்ற பிறகும் என் சேவை இந்த மண்ணில் நிலைத்திருக்க வேண்டும் என்பதே என் ஆசை’ என்று கண்ணீர் பொங்கக் கூறியுள்ளார்.

குமாரசாமியின் இந்த பேச்சு அரசியல் லாபத்திற்காக தான் என்று எதிர்க்கட்சிகள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.