நான் அப்படித்தான் சொல்வேன்: ராகுல்காந்திக்கு மோடி பதிலடி

 

நான் அப்படித்தான் சொல்வேன்: ராகுல்காந்திக்கு மோடி பதிலடி

நான் ”பாரத் மாதா கி ஜே” என்றுதான் சொல்வேன் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெய்ப்பூர்: நான் ”பாரத் மாதா கி ஜே” என்றுதான் சொல்வேன் என ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் நாளை மறுதினம் (டிசம்பர் 7) சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் வென்று ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸூம் தீவிரம் காட்டி வருகின்றன .இதற்காக இறுதிக்கட்ட பிரசார்த்தில் இரு கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகேடா நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 

மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்கிறார். ஆனால், உண்மையில் அவர் அனில் அம்பானி போன்ற தொழில் அதிபர்களுக்காகத்தான் வேலை செய்கிறார். எனவே, அவர் ஒவ்வொரு கூட்டத்திலும் ‘அனில் அம்பானி கி ஜே’, ‘நிரவ் மோடி கி ஜே’, ‘மெகுல் சோக்சி கி ஜே’ என்று சொல்ல வேண்டும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேற்று நடந்த பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி,காங்கிரசுக்கு ஒரு வாரிசு தலைவர் இருக்கிறார். அவர் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளார். எந்த கூட்டத்திலும், ‘பாரத் மாதா கி ஜே’ என்று மோடி தனது பேச்சை தொடங்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

இங்குள்ள மக்கள் முன்பு அந்த கட்டளையை நான் உடைக்கிறேன். ‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக் கானோர் முன்பு 10 தடவை சொல்வேன். எத்தனையோ சுதந்திர போராட்ட வீரர்கள், ‘பாரத் மாதா கி ஜே’ என்று சொல்லி மரணத்தை தழுவி உள்ளனர். அத்தகைய கோஷத்தை சொல்லக்கூடாது என்று கூறியதற்காக, ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். பாரத மாதாவை அவர் இழிவுபடுத்திவிட்டார் என்றார்.