நானும் மனிதன்தான்…. டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் இழப்பை பார்த்து வேதனையடைந்தேன்: மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

 

நானும் மனிதன்தான்…. டெல்டாவில் ஏற்பட்டிருக்கும் இழப்பை பார்த்து வேதனையடைந்தேன்: மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

நானும் மனிதன் என்ற முறையால் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை கண்டு மிகவும் வேதனை அடைந்ததாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

நாகப்பட்டினம்: நானும் மனிதன் என்ற முறையால் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை கண்டு மிகவும் வேதனை அடைந்ததாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் கூறியுள்ளார்.

கஜா புயலால் உருக்குலைந்து கிடக்கும் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வந்தது. நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் இருந்து தனது ஆய்வை தொடங்கியது. அப்போது பொது மக்கள் மத்திய குழுவினரிடம் கதறி அழுதனர். தொடர்ந்து மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் தஞ்சாவூர் மற்றும் திருவாரூருக்கு சென்று அங்கும் ஆய்வை மேற்கொண்டு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பேசி ஆறுதல் தெரிவித்தனர்.

3-வது நாளான இன்று மத்திய குழுவினர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். வேதாரண்யம், விழுந்தமாவடி, வேட்டைக்காரன் இருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு சேத மதிப்பை கேட்டறிந்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் காரைக்கால் செல்ல இருக்கின்றனர். 

இந்நிலையில் நாகையில் ஆய்வை முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட், சேதம் ஏற்பட்டிருந்தாலும் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நானும் மனிதன் என்பதால் கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பை கண்டு மிகவும் வேதனையடைந்தேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாரட்டுக்கள். இதனை மக்களிடம் கொண்டு சென்ற ஊடகங்களுக்கு நன்றி என்றார்.