‘நாட்டாமை டீச்சர்’ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் அறிவிப்பு!

 

‘நாட்டாமை டீச்சர்’ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் அறிவிப்பு!

நடிகர் சண்முகராஜன் மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி, பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படங்களில் தொடர்ந்து நடிக்க முடியும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை: நடிகர் சண்முகராஜன் மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்த நடிகை ராணி, பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படங்களில் தொடர்ந்து நடிக்க முடியும் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

வில்லுப்பாட்டுக்காரன், காதல்கோட்டை, நாட்டாமை, ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராணி. இவர் பிரபல தொலைக்காட்சியின் முன்னணி சீரியலின் ஷூட்டிங்கின் போது நடிகர் சண்முகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக்  காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கமல் ஹாசனின் ‘விருமாண்டி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம்  கண்ணீர் மல்க நடிகை ராணி புகார் கொடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகர் சண்முகராஜனுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான பாலியல் புகாரை திரும்பப் பெறுகிறேன் என்றும் நடிகை ராணி தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக  நடிகை ராணி, தன் மீது பொய் புகார் கொடுத்து தன் பெயரை களங்கப்படுத்தி விட்டதாக நடிகர் சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக, ராணியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான பதிலை ராணி இது வரை வழங்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சங்கம், நடிகர் சண்முகராஜனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘நடிகை ராணியின் பாலியல் புகார் குறித்து, 09.12.18 அன்று நடந்த செயற்குழுவில் தாங்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தீர்கள். தங்கள் மீது, காழ்ப்புணர்ச்சியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது என்பதை தாங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்துகொண்டோம்.தாங்கள் திரைத்துறையிலும் நாடகத்துறையிலும் இதுவரை தனிப்பட்ட முறையில் நற்பெயர் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த அசம்பாவிதத்துக்கு நடிகர் சங்கம் வருந்துகிறது. அதே நேரம், இனிவரும் காலத்தில் நடிகை ராணி, திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரி லோ நடிக்க வரும்போது, அவர் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.