நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

 

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது

டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் 13 மாநிலங்களில் நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த பெட்ரோல், டீசல் விலையற்றம் குறித்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார். மேலும், மாநிலங்களும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல், பொது துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ.1 குறைத்துள்ளதை அடுத்து பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைந்துள்ளது.

இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து ரூ.2.63 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.84.70-ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து ரூ.2.68 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.77.11-ஆகவும் விற்பனையாகிறது.

அதேசமயம், அருண் ஜெட்லியின் கோரிக்கையை ஏற்று, பாஜக ஆளும் உத்தரகாண்ட், சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், திரிபுரா , ஜார்க்கண்ட் , கோவா, ஹரியானா, ராஜஸ்தான், அருணாசலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் ரூ.2.50 வரை வாட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது.