நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மேற்கு வங்கம், கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

 

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மேற்கு வங்கம், கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…

நாடு தழுவிய வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேசமயம் பெரும்பாலான மாநிலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்தும், பரிந்துரைக்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தத்தை நீக்குதல், குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ. 21,000-24,000 உயர்த்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயாக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது உள்பட  14 கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட 10 மத்திய வர்த்தக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. 

போராட்டத்தில் பெண்கள்

தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் நேற்று மேற்கு வங்கம், கேரளா மற்றும் பஞ்சாபின் ஒரு சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இயல்புவாழ்க்கை நேற்று பாதிக்கப்படவில்லை. அதேசமயம் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. வடஇந்தியாவை பொறுத்தவரை அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு கலவையான பதில் இருந்தது. பஞ்சாப்பில் வேலைநிறுத்த போராட்டத்தால் ஒரு சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்

கிழக்கு பகுதியில், மேற்கு வங்கத்தில் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டது. வன்முறை மற்றும் பொது சொத்துக்களுக்கு தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நேற்று அரங்கேறின. தென்பகுதியை பொறுத்தவரை கேரளாவில் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தின் தாக்கம் பெரிய அளவில் தெரிந்தது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் பெரிய அளவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. மேற்கு பகுதியில் தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேலைநிறுத்த போராட்டத்தின் தாக்கம் தெரிந்தது.