நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

போலீசார், துணை ராணுவப்படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர்

புதுதில்லி: நாடு முழுவதும் 18 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 (இன்று) முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, ஆந்திரா (25), தெலங்கானா (17), அருணாச்சலப்பிரதேசம் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகலாந்து (1), சிக்கிம் (1), அசாம் (5), பிகார் (4), சத்தீஸ்கர் (1), ஜம்மு-காஷ்மீர் (2), மகாராஷ்டிரா (7), மணிப்பூர் (1), ஒடிசா (4), திரிபுரா (1), உத்தரப்பிரதேசம் (8), உத்தரகாண்ட் (5) மற்றும் மேற்கு வங்கம் (2) ஆகிய 18 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவுகள் (1), லட்சத்தீவுகள் (1)  ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆந்திரா (175), அருணாச்சலப் பிரதேசம் (60), சிக்கிம் (32) ஆகிய மூன்று மாநில சட்டப்பேரவைகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அங்குள்ள எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 18, 23, 29 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலையொட்டி, அந்தந்த மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போலீசார், துணை ராணுவப்படையினர் என ஏராளமானோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், அந்த தொகுதிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம்​ எழுதியுள்ளார்.

நக்சல் தாக்குதலுக்கு வாய்ப்புண்டு என்கிற அச்சத்தால் ஒடிசாவின், மல்கன்கிரி மாவட்டம் சித்திரகொண்டாவில் அமைந்துள்ள 6 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

மூன்று மணி நிலவரப்படி ஆந்திராவில் 55%, அருணாச்சலபிரதேசத்தில் 50.87%, சிக்கிமில் 55%, மகாராஷ்டிராவில் 46.13%, நாகலாந்தில் 68%, அஸ்ஸாம் 59.5%, மேகாலயா 55%, தெலங்கானாவில் 48.95% வாக்குகள் பதிவாகின. மாலை 5 மணி வரையில் பிகாரில் 50.26%, தெலுங்கானாவில் 60.57 %, மேகாலயா 62%, உத்தரப்பிரதேசம் 59.77%, மணிப்பூர் 78.20%, லட்சத்தீவுகள் 65.9%, அசாம் 68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையும் வாசிங்க

ராகுலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை; மத்திய அரசு விளக்கம்