நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக

 

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் – விசிக – மதிமுக – இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. ஆனால் அதிமுகவோ, பாஜகவோ கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி அமைவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக பேசிவருகிறார்.

இதற்கிடையே அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டு வந்த சூழலில் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறினார். இதனால் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது இழுபறியாகி இருக்கிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய தங்கமணி, எஸ்.பி வேலுமணி, வைத்திலிங்கம், கே.பி முனுசாமி, ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் பரப்புரை குறித்து முடிவு செய்ய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவும், நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க ஜெயக்குமார், பொன்னையன் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.