நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை… எங்களுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் – ரஜினிகாந்த்

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை… எங்களுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் – ரஜினிகாந்த்

நடைபெறவிருக்கும் பாரளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.

சென்னை: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த அரசியல் கட்சிக்கும் தனது ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்திருந்த நிலையில், தற்போது ஓராண்டுகளுக்கு மேலாகியும் இது வரை எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர். புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் கமல் ஹாசன் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அறிவிப்போ அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ’வருகின்ற பாரளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு.

நடைபெறவிருக்கும் பாரளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ, மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரச்சாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடது.

தமிழ் நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வரவிருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக்கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியுள்ளார்.