நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

 

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது

டெல்லி: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 18-ம் தேதியன்று கூடியது. இந்த கூட்டதொடரானது ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை 18 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரின் போது, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இன்று முதல் முதல் ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத் தொடரில், ராமர் கோயில், சிபிஐ இயக்குனர் விவகாரம், ரஃபேல் விமான ஒப்பந்தம், உர்ஜித் படேல் ராஜினாமா உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என தெரிகிறது.

அதேசமயம், முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை நிறைவேற்ற மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கும். மேலும் நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டும். இந்த தொடரில் 23 சட்டமுன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவு, மோட்டார் வாகன சட்டத்திருத்த முன்வடிவு போன்றவையும் இதில் அடங்கும். இவை தவிர புதிதாக 20 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

நாடாளுமன்றம் இன்று கூடியவுடன் முதலில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விட்டு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து நாளை முதல் இரு அவைகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிற 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிற நாளில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பான முழுமையான கூட்டத்தொடர் இதுதான் என்பதால் இந்த தொடர் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.