நாடாளுமன்றம் கலைப்பு?-இலங்கை அரசு விளக்கம்; பெரும்பான்மை இருப்பதாக ராஜபக்சே தகவல்

 

நாடாளுமன்றம் கலைப்பு?-இலங்கை அரசு விளக்கம்; பெரும்பான்மை இருப்பதாக ராஜபக்சே தகவல்

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்கே பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ராஜபக்சேவிற்கு பெரும்பான்மையான எம்.பி.-க்களின் ஆதரவு இல்லை எனவும், இதனால் எம்.பி.-க்களை இழுக்க அங்கு குதிரை பேரங்கள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனிடையே, இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ம் தேதி கூடும் என்று அறிவித்துள்ள அதிபர் சிறிசேன, ராஜபக்சேவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

அதேசமயம், நவம்பர் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும்போது மஹிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்குகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், அவர்களின் ஆதரவை திரட்ட இரு தரப்பினரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க அந்நாட்டு அதிபர் சிறிசேன திட்டமிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என இலங்கை அரச தற்போது விளக்கமளித்துள்ளது.

அதேபோல், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற செய்திக்கு பிரதமர் ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார். பெரும்பான்மை உள்ளதால் கலைக்கப்படாது என்றும், தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.