நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? கமல்

 

நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி? கமல்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். தீவிர அரசியலில் முனைப்புடன் செயல்பட்டு வரும் அவர், பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்று பயணம் மேற்கொண்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அதேசமயம், அவரது கட்சி தனித்து களம் காணுமா? அல்லது கூட்டணி வைத்து களம் காணுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அண்மையில் கமல் சந்தித்ததால் காங்கிரஸ் உடன் அக்கட்சி கூட்டணி அமைக்கும் என கூறப்பட்டது.

ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி, கமல் கட்சியுடன் கூட்டணி வைக்கும் ரிஸ்க்கை காங்கிரஸ் எடுக்குமா? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பினர். இதனிடையே, திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் என கமல் கூறியது விவாத பொருளாகவும் மாறியது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களின் கூட்டம், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார். எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை இப்போதே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்ட கமல், தமிழகத்தின் மரபணுவை மாற்றத் துடிக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை எனவும் விளக்கமளித்தார்.

கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு முழு அதிகாரத்தை கட்சி எனக்கு வழங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.