நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; தீயிட்டு கொளுத்தப்பட்ட கேரளா பெண்ணின் குடும்பத்தினர் கதறல்!

 

நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; தீயிட்டு கொளுத்தப்பட்ட கேரளா பெண்ணின் குடும்பத்தினர் கதறல்!

தீயிட்டு கொளுத்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட தொந்தரவுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

திருவனந்தபுரம்: தீயிட்டு கொளுத்தப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட தொந்தரவுகளை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என அப்பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கதறல் ஓலம்:

எர்ணாகுளம் மருத்துவமனை முழுவதுமே அப்பெண்ணின் கதறல் ஓலம் கேட்கிறது. ஆம், அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார் கவிதா விஜயகுமார் என்ற அந்த 20 வயது பெண். 65 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் கொச்சியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கவிதா, பூரண குணமடைய வேண்டும் என அவரது குடும்பத்தினர் பிராத்தனை செய்து வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்களோ அவர்களின் நிலையை கண்டு கண்ணீர் விடுகின்றனர்.

தீயிட்டு கொளுத்தப்பட்ட மாணவி:

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி படித்து வரும் அந்த மாணவியை, அதே பகுதியை சேர்ந்த அஜின் ரேஜி மேத்யூ (18), ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. பலமுறை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மேத்யூ வலியுறுத்தியும் கவிதா மறுத்து வந்துள்ளார். எனினும், மாணவியை விடாமல் அவர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த தினத்தன்று வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு சென்ற போது, வழிமறித்த மேத்யூ, தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி மறுபடியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவர், தான் கொண்டு வந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி தீ வைத்தார்.

kerala

இதைக் கண்டதும் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மாணவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பி ஓட முயன்ற மேத்யூவை அவர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் மீதி மீது 302-பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் பட்டப்பகலில் நடுரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாணவியின் கனவு:

தினக்கூலியான கவிதாவின் தந்தை தனது மகள்களின் படிப்புக்காக அண்மையில் தான் திருவலாவில் குடும்பத்துடன் வாடகை வீடு ஒன்றில் குடியேறியுள்ளார். கவிதாவின் மூத்த சகோதரிகள் இருவரும் மருத்துவ துறையில் தான் பணிபுரிந்து வருகிறார். அவரை போலவே மருத்துவ துறையில் சேவையாற்ற வேண்டும் என்பது கவிதாவின் கனவு. அவர்களில் ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

சம்பவம் குறித்து கவிதாவின் குடும்பத்தினர் கூறும்போது, ஒரு பையன் தனக்கு தொந்தரவு தருவதாக ஏற்கனவே கூறினார். ஆனால், அப்போது அதனை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. செல்லும் வழியில் யாரோ சீண்டியது போலவே அவர் கூறினார். அவர் கூறியது சிறிய தொந்தரவு போன்றே இருந்தது. எனவே, நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றனர்.

மேலும், கடந்த ஒரு வாரமாகவே கவிதா வருத்தத்துடன் காணப்பட்டார். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்தோ, அல்லது சைலன்ட்டில் போட்டோ வைத்திருந்தார். இந்த சம்பவத்துக்கு பின்னர் தான் எங்களுக்கு தெரியவந்தது, அந்த பையனால் தான் அவ்வாறு அவர் இருந்துள்ளார் என்று. அப்போதே இதுகுறித்து எங்களிடம் கூறியிருந்தால், நாங்கள் தலையிட்டு இது போன்று நடக்காமல் பார்த்திருப்போம் என்றனர் வேதனையுடன்.

குடும்பத்தின் தவிப்பு:

கவிதாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவே மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சிகிச்சைக்கு போதிய பொருளாதார வசதி இல்லாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோன்று, காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து அவர்கள் இன்னும் புகார் அளிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை கவிதாவை காப்பாற்றுவதே முதன்மையாக கருதுகின்றனர். எனினும், தங்களது மகளுக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயாராக இருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.