நாங்கள் இன்னொரு அனிதாவை இழக்க விரும்பவில்லை; ராகுல் உருக்கம்!

 

நாங்கள் இன்னொரு அனிதாவை இழக்க விரும்பவில்லை; ராகுல் உருக்கம்!

தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கவில்லை. இனி அந்த நிலை தொடராது. இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழக மக்களும் அவர்களின் கலாசாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது

சேலம்: நாங்கள் இன்னொரு அனிதாவை இழக்க விரும்பவில்லை என தேனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் உருக்கமாக பேசினார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் அவர் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

rahul

முதலாவதாக கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணகிரியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், தமிழகத்தின் குரல் மத்தியில் கேட்கவில்லை. இனி அந்த நிலை தொடராது. இனி தமிழர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். தமிழக மக்களும் அவர்களின் கலாசாரமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகத்தில் ஆளும் அதிமுக-வை பிரதமர் மோடி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவரால் அடிமைப்படுத்த இயலாது. வெறுப்பு அரசியல் மூலமாக தமிழகத்தில் காலூன்ற பாஜக பார்க்கிறது. அன்பின் மூலமாகத்தான் தமிழ் மக்களின் ஆதரவை பெற முடியும்.

modi, edappad

கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 15 பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்திருக்கிறார். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கடந்த தேர்தலின் போது பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதி அளித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தற்போது ரூ.72000 கொடுக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். வறுமையின் மீது நான் நடத்தப் போகும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது. தமிழகத்தை நாக்பூரில் இருப்பவர்கள்ஆட்சி செய்யக் கூடாது. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும். அதற்கு தான்  திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார் என்றார்.

rahul

தொடர்ந்து, சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கலந்து கொண்ட ராகுல் அங்கு பேசியதாவது: பண மதிப்பிழப்பு குறித்து யாரிடமும் மோடி ஆலோசிக்கவில்லை. கேட்டிருந்தால் 12 வயது குழந்தை கூட, இது தவறான திட்டம் என கூறியிருக்கும்.

rahul

ஏழைகளுக்கு நிதி உதவி வழங்குவது எந்த நாட்டிலும் இல்லாத புரட்சிகர திட்டமாகும். இந்த பணம் பெண்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மேக் இன் இந்தியா என்ற வெற்று அறிவிப்பைதான், மோடி சொல்லி வந்தார். ஆனால், உங்கள் கைகளில் உள்ள பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவிலும், தமிழகத்திலும் பொருட்கள் தயாரிக்கப்படும்.

Anitha

அதன்பின்னர் தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் ஆன்டிபட்டி, பெரியகுளம் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராகுல், தந்தை பெரியார், கலைஞர் பற்றிய புத்தகங்களை பிரதமர் மோடி படிக்க வேண்டும். அதன்பிறகு தமிழகத்தை பற்றி மோடி தெரிந்து கொள்வார் என நினைக்கிறேன். தேசத்தின் பொருளாதாரத்துக்கு பதிப்பு இல்லாமல் ஏழைகளுக்கு  மாதம் ரூ.6000 வழங்க முடியும். அதனை தான் செயல்படுத்தவுள்ளோம். நாங்கள் இன்னொரு அனிதாவை இழக்க விரும்பவில்லை. நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இதையும் வாசிங்க

அரசியலுக்கு எங்களை பயன்படுத்த வேண்டாம்: 150 முன்னாள் ராணுவ வீரர்கள் கடிதம்?!..