நாங்களும் கதை சொல்லுவோம், எங்களுக்கும் குட்டிக்கதை தெரியும் – எடப்பாடியார்!

 

நாங்களும் கதை சொல்லுவோம், எங்களுக்கும் குட்டிக்கதை தெரியும் – எடப்பாடியார்!

திரைக்கலைஞர்கள் தங்கள் கடமையை கருத்தாகச் செய்தால், பத்து வருடம் கழிந்தாலும் கலைமாமணி தானாக தேடிவரும். இதுதான் எடப்பாடியாரின் அந்த குட்டிக்கதை. இதே மாதிரி நிறைய குட்டிக்கதை வேணும்னா, அடுத்த வாட்டியும் மறக்காமல் எடப்பாடியாரை முதல்வராக்கவேண்டியது உங்கள் பொறுப்பு!

2011 முதல் 2018ஆம் ஆண்டு வரை திரைக்கலைஞர்களுக்கான விருது வழங்கும்விழா ஒரே தவணையில் நடந்தது, அதில் நடிகர் ஸ்ரீகாந்த் விருது வாங்கியதைவிடவும் ஹைலைட்டான விஷயம் முதலவர் எடப்பாடியார் சொன்ன குட்டிக்கதைதான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இப்படித்தான் பூங்குண்றன் சொல்லித்தரும் கதைகளை ஒவ்வொரு விழாவின்போதும் சொல்லுவார். அமைச்சரை தடாலடியாக பதவி நீக்கியதற்குப் பிறகு, குட்டிகதை சொல்வதிலும் ஜெயலலிதா பாணியை எடப்பாடியார் பின்பற்றுகிறார். குட்டிக்கதை என்னன்னா, ஒரு ஊர்ல ஒரு வயதான முனிவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து தன்னுடைய கிழிந்த வேட்டியை ஊசி நூலால் தைத்துக்கொண்டிருந்தாராம். கணவர் சிவபெருமானுடன் அவ்வழியாகச் சென்ற பார்வதி ஏழையான முனிவரைப் பார்த்து பரிதாபப்பட்டு அவருக்கு ஏதேனும் வரம் வழங்கிச் செல்லலாமா என சிவனிடம் கேட்கிறார். முனிவரைப் பற்றி தெரிந்திருந்த சிவன், ”அதெல்லாம் வேண்டாம் தேவி, வரம் வாங்கும் நிலை எல்லாம் தாண்டியவர் அவர்” என பக்குவமாகச் சொல்ல, “நான் சொன்ன ஒண்ணைக்கூட நீங்கள் நிறைவேற்றுவதில்லை, எல்லாம் நான் வாங்கிவந்த வரம்” என பார்வதி கோவித்துகொண்டார். மனைவி சொல்லை தட்டினால் ராத்திரிக்கி சோத்துல அம்மணி வெசம் வச்சிடும் என்பதால், சிவபெருமானும் சரியென்று முனிவரிடம் தம்பதி சமேதிரமாக செல்கிறார்.
முனிவர் இவர்களைப் பார்த்ததும், ”அடடே எம்பெருமானும் சக்தியுமா? வாங்க வாங்க, சவுக்கியமா, முருகன் பழம் வேணும்னு கோவிச்சுக்கிட்டு போனானே திரும்ப வந்துட்டானா? நல்ல விளையாட்டுப் பிள்ளை அப்பாவுக்கு தப்பாமல்” என சொல்லிக்கொண்டே வேட்டியை தைத்துக்கொண்டிருந்தார். ரொம்ப நேரமாக வேறு எதுவுமே நடக்காததால், சிவனுக்கு ஜாடை காட்டுகிறார் பார்வதி. சிவனும் முனிவரைப் பார்த்து, ”சரி முனிவரே, அப்புறம் நாங்க அப்டியே கெளம்புறோம்” என்க முனிவரும், “ஓ அப்டியா, ரைட்டு கெளம்புங்க பெறவு பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு வேட்டியை தைப்பதை தொடர்கிறார். பார்வதிக்கோ கோவம். “இப்புடியா சொல்லுவீங்க, ஒழுங்காச் சொல்லுங்க, நான் இன்னைக்கி வரம் குடுத்தே ஆவணும்” என்க, சிவன் முனிவரிடம், “அதில்ல முனிவரே, நாங்க யாரையாவது போய் பார்த்தா வரம் கொடுக்கிறது வழக்கம், அப்புறம் உங்களுக்கு என்ன வரம் வேணும்னு சொன்னீங்கனா, குடுத்துட்டு கெளம்பிடுவோம்” என்கிறார். முனிவர் நிமிர்ந்து பார்த்துவிட்டு, ”வரமா எனக்கா? நோ தேங்க்ஸ் சிவா, தேங்க் யூ ஃபார் ஆஸ்க்கிங்” என்றுவிட்டு வேட்டியை தொடர்கிறார். சிவா திரும்பவும் அடம்பிடிக்க, “நோ மீன்ஸ் நோ” என்கிறார் முனிவர்.

CM distributing awards to cine stars

பார்வதியும் சிவனும் தொடர்ந்து வற்புறுத்தவே, சரி உங்களுக்காக ஒரு வரம் கேட்கிறேன், வேட்டியை தைக்கிறேன் இல்லையா, இந்த ஊசி போற பக்கமாவே இந்த நூலும் பின்னாடியே போகவேண்டும், முடிந்தால் இந்த வரம் தாருங்கள்” என கேட்கிறார். பார்வதிக்கோ பிடிபடவில்லை. ”முனிவரே, நாங்கள் இந்த வரம் கொடுக்காவிட்டாலும் ஊசி பின்னால்தானே நூல் வரும், இதற்கு தனியாக வரம் எதற்கு” என வினவுகிறார். முனிவர் சொல்கிறார், “அதே அதே, நான் செய்யவேண்டியதை செய்தால் அதற்கான பலன் தானாக வரும், வரத்திற்காக காத்திருக்க வேண்டாமே சக்தியே” என்கிறார். அதைப்போல, திரைக்கலைஞர்கள் தங்கள் கடமையை கருத்தாகச் செய்தால், பத்து வருடம் கழிந்தாலும் கலைமாமணி தானாக தேடிவரும். இதுதான் எடப்பாடியாரின் அந்த குட்டிக்கதை. கதை ஜாலியா இருந்துச்சா, யானையிலேர்ந்து இறங்கிக்கங்க. இதே மாதிரி நிறைய குட்டிக்கதை வேணும்னா, அடுத்த வாட்டியும் மறக்காமல் எடப்பாடியாரை முதல்வராக்கவேண்டியது உங்கள் பொறுப்பு!